தாயிம்பள்ளி - பெரிய நெசவு தெரு - லெப்பை தம்பி சாலை மார்க்கத்தில் புதிய சாலை அமைக்கும் பணி டிசம்பர்
26 அன்று துவங்கின. சுமார் 35 லட்ச ரூபாய் மதிப்பிலான இப்பணிகள் நடக்கும் போதே இப்பாதையில் - தேவைப்படும் இடங்களில், இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களை பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக காயல்பட்டணம்.காம் அவ்வேளையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில் - ஜனவரி 2 அன்று, பெரிய நெசவு தெருவை சார்ந்த செய்யத் அஹமத் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, நகர்மன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கோரி, சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒரு வார
காலத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கிற்குத் தொடர்பான மனுவில், மனுதாரர் -
குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர்தான் சாலைப்பணிகள் துவக்கப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால் மக்கள் பணம் வீண்விரயம் ஆகும் என்றும் கூறியிருந்தார்.
தோண்டப்பட்ட சாலையின் மணல், கற்கள் - நகராட்சி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள காட்சி...
இரண்டாம் குடிநீர் திட்டத்தின் ஒரு பகுதியான உள்ளூர் குடிநீர் விநியோக குழாய்கள் (INTERNAL WATER DISTRIBUTION SYSTEM) பதிப்பதற்குத் தேவையான குழாய்கள் - நேற்று (ஞாயிறு; ஜனவரி 5) - பெரிய நெசவுத் தெரு சாலையில் இறக்கப்பட்டுள்ளன.
நகரில் சுமார் 52 கிலோ மீட்டர் நீளத்திற்கு - வெவ்வேறு அளவிலான குடிநீர் விநியோகக் குழாய்கள், இரண்டாம் குடிநீர் திட்டம் மூலம் புதிதாக பதிக்கப்படவுள்ளன. இத்திட்டம் குறித்த முழு ஆவணங்களை - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளது. அதில் - உள்ளூர் குடிநீர் விநியோக குழாய்கள் பதிப்பு பணியின் மதிப்பீடு ரூபாய் 6.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் - இப்பணி நடக்கும்போது சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய நிதியும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|