காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறுத்தத்தைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் - ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கலந்தாலோசனைக் கூட்டம்:
தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் நகர அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து பொதுநல இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர் தலைமையில் நடைபெற்றது.
சர்வ கட்சியினர், பொதுநல அமைப்பினர் கருத்துரை:
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கூட்ட அறிமுகவுரையாற்றினார். பின்னர், நகரின் அனைத்துக் கட்சிகள் - பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துரையாற்றினர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான்,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துவராஜ்,
அரிமா சங்கம் சார்பில் வி.பி.ஐ.புகாரீ,
திமுக சார்பில் ஆர்.எஸ்.கோபால்,
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அப்துல் அஜீஸ்,
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்,
மதிமுக சார்பில் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை,
நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி,
வஞ்சிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் அலீ அக்பர்
ஆகியோர் கருத்துரையாற்றினர். காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாடு குறித்து பலரும் பல நேரங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையிலும் அவை தொடர்வண்டித் துறையால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், போராட்டம் நடத்துவதே இதற்குத் தீர்வு என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
முஸ்லிம் லீக் மாநில செயலாளர் சிறப்புரை:
நிறைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளில் காட்டப்படும் மெத்தனம், அதனால் பொதுமக்கள் நாள்தோறும் படும் அவதிகள் குறித்து அவர் விரிவாக விளக்கிப் பேசினார்.
இதே தொடர்வண்டி நிலையத்தில், முற்காலத்தில் ரெயில்கள் எதுவுமே நிற்காது என்ற நிலை ஏற்பட்டபோது, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் ஒருங்கிணைப்பில், ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் தொடர்வண்டித்துறை இணையமைச்சராக இருந்தபோது காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தைப் பார்வையிட்டு, அதன் மேம்பாட்டுப் பணிகளுக்கு உத்தரவிட்டதையும், இதன் காரணமாக பல தொடர்வண்டி நிலையங்கள் பலனடையத் துவங்கியதையும் நினைவுகூர்ந்து பேசினார்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் பணிகள் துவக்கப்பட்டு, குறைந்தளவு பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில், பணிகள் இடைநின்று போனதாகவும், இதுகுறித்து தொடர்வண்டித் துறை உயரதிகாரிகளுடன் பலமுறை நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் நினைவூட்டிய பின்னரும் செவிசாய்க்கப்படவில்லை என்றும் கூறிய அவர், அதன் பின் - கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இத்தனைக்குப் பிறகும் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படாததால், இனி ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூற, அனைவரும் அதனை ஒரே குரலில் வரவேற்றனர்.
தீர்மானங்கள்:
பின்வருமாறு கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ரயில் மறியல் போராட்டம்:
காயல்பட்டினம் தென்னகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தூத்துக்குடி மாவட்டத்தில் - தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்து காயல்பட்டினம் மட்டுமே நகராட்சியாகும். சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகர், சர்வதேச தொடர்புள்ள ஊராகும். இதன் காரணமாக, வெளிநாடு மற்றும் வெளியூர்வாசிகள் இந்நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நகரில் அமைந்துள்ள ரெயில்வே நிலையத்தை இந்நகர பொதுமக்களும், சுற்றுலாப் பயணியரும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்ற காரணத்தால், இங்கு அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் செய்து தர வேண்டும் என இந்நகர மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
கடந்த 29.12.2009 அன்று - அன்றைய மத்திய ரெயில்வே துறை இணையமைச்சர் இ.அகமது அவர்கள் இந்நகருக்கு வருகை தந்து, ரெயில்வே நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, இங்கு நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பணிகள் சிலவற்றை நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டது.
அவ்வாறு விடப்பட்ட பணிகளுக்கான டெண்டர், நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு, சில பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் இதுவரை தொடங்கப்படவேயில்லை. நாங்கள் விசாரித்து அறிந்த வரையில், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தக்காரருக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும், மற்ற பணிகளுக்கு பண ஒதுக்கீடே செய்யப்படவில்லை என்றும் பலவாறான தகவல்கள் தரப்படுகின்றன.
எனவே, இந்நகர மக்களின் பிரதான கோரிக்கையான,
காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில், அனைத்து ரெயில் பெட்டிகளும் நிற்கும் அளவிற்கு நடைமேடையை விரிவாக்கியும், உயர்த்தியும், மேற்கூரை அமைத்தும் தர வேண்டும் என்பதே. தற்போது இவ்வசதி இல்லாத காரணத்தால், ரெயில் பயணிகள் ரெயிலில் ஏறவும், இறங்கவும் முடியாமல் கீழே விழுந்து விபத்திற்குள்ளாவது அன்றாடக் காட்சியாகிவிட்டது. ஏறவும், இறங்கவும் முடியாதவர்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக வேறு ரெயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில், இந்த ரெயில் நிலையத்தைப் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிகவும் இருட்டாக உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் இந்த ரெயில் நிலையத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன.
குடிநீர், சுகாதார வசதிகள், இந்த ரெயில் நிலையத்தில் பயணியருக்கும் இல்லை; இங்கு தங்கி பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இல்லை. இந்த ரெயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளரும் இல்லை.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், உயரதிகாரிகளிடம் மக்கள் பிரதிநிதிகளின் துணை கொண்டு பலமுறை வலியுறுத்தியும் கூட, தென்னக ரெயில்வே இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.
எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி - எதிர்வரும் 2014 - பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல், காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 2 - கிழக்கு கடற்கரை சாலை:
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, தூத்துக்குடி - கன்னியாகுமரி வழித்தடத்தில் மட்டுமே பணிகள் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
துறைமுகங்களையும், கடற்கரை ஊர்களையும் இணைக்கும் - தேசிய பாதுகாப்பு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலைப் பணியை சிதைத்து சீரழிக்கும் நோக்கோடு - கடற்கரைக்கு மேற்கே 5 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவில் இச்சாலையை அமைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, புன்னைக்காயல் முதல் திருச்செந்தூர் வரையுள்ள கடற்கரை ஊர்களை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் வழி மாற்றியமைக்கப்படும் இத்திட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நகராட்சியான காயல்பட்டினமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் செல்வாக்குள்ள சில தனிப்பட்ட நபர்களின் தலையீட்டால் - திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால் பயணத் தொலைவு அதிகரிப்பதோடு, இச்சாலையின் நோக்கமும் வீணாகிவிடும். ரெயில் பாதையும் குறுக்கிட்டு செலவும் அதிகரிக்கும்.
எனவே, புனிதத் தலங்களையும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், கடற்கரை ஊர்களையும் இணைக்கும் வகையில் - காயல்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - இணையதளங்கள் மூலம் கோரிக்கை:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம், கிழக்கு கடற்கரை சாலை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர், தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு, வெளிநாடு - வெளியூர் வாழ் காயல் நகர்நல அமைப்புகள் சார்பில் இணையதளங்கள் மூலம் கோரிக்கை விடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - நகராட்சிக்குக் கோரிக்கை:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள், காயல்பட்டினம் வழித்தடத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக, தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றி, தமிழக முதலமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர் - அதிகாரிகளுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளர், மதுரை கோட்ட மேலாளருக்கும் அனுப்பி வைக்கவும், மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து - அவரது பரிந்துரையைப் பெறவும், காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - நகர்மன்ற உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்:
அறிவிக்கப்பட்டுள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு, நகரின் ஒவ்வொரு வார்டிலிருந்தும் தலா 50 பேருக்குக் குறையாமலும், ஒவ்வொரு ஜமாஅத் / புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் தலா 50 பேருக்குக் குறையாமலும் - சுமார் 3 ஆயிரம் பேரைத் திரட்ட, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், ஜமாஅத்துகள், ஊர் நலக்கமிட்டி நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம், இளைஞர் ஐக்கிய முன்னணி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை, மஜ்லிஸுல் கவ்து சங்கம், அரிமா சங்கம், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு ஊர் நலக் கமிட்டி, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காழி அலாவுத்தீன் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பு:
இரவு 07.00 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாலையில் நடைபெற்ற கூட்ட விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் செய்தியாளர்களிடம் விளக்கிப் பேசினார்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |