காயல்பட்டினம் நகராட்சியில், ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவர்களது செயல்பாடுகளால் நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாகவும், இவை குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது 14 ஒப்பந்தப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர், ‘ரோஜா ஆண்கள் சுயவுதவிக் குழு’ என்ற அமைப்பின் பெயரில் - நகராட்சியின் துப்புரவுப் பணிக்கு என சில ஆண்டுகளுக்கு முன் நியமனம் செய்யப்பட்டனர்.
ஆனால் துப்புரவு பணியில் செயல்புரிய வேண்டிய இவர்கள், இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையரின் ஓட்டுநராகவும், வங்கியில் நகராட்சியின் பணப்பரிமாற்றங்களைச் செய்வோராகவும், கட்டிட அனுமதி விண்ணப்பங்களைப் பரிசீலிப்பவர்களாகவும் - எவ்வித தகுதியோ, அரசு அனுமதியோ இன்றி பணியில் இருந்து வருகின்றனர்.
இப்பணியில் சேர, இவர்கள் 30,000 ரூபாய் முன் தொகை வழங்கியதாக, முந்தைய நகர்மன்ற காலகட்டத்தின்போது தெரிவித்திருந்த செய்தி, அப்போதைய ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்தது.
ஆனால் நகராட்சியோ, அவ்வாறு எவரிடமிருந்தும், எந்த முன்தொகையும் பெறப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்துள்ளது. அப்படியெனில் அந்தப் பணம் யாருக்கு வழங்கப்பட்டது? இது குறித்து எந்த விசாரணையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நகராட்சியின் மற்றொரு ஒப்பந்தப் பணியாளர் - தொழில்நுட்ப உதவியாளர் என பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால், “இது முறையான நியமனம் அல்ல” என உள்ளாட்சித் துறையின் தணிக்கைத் தடை அறிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருகிறது.
இது தவிர, கணினி இயக்குநராகவும், வாகன ஓட்டுநராகவும் சிலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் - முறைப்படி விளம்பரம் செய்யப்பட்டு, பல விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றிலிருந்து தேர்வு செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்து, பல தருணங்களில் பல வகையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவர்களின் செயல்பாடுகள் காரணமாக நகராட்சிக்கு அவப்பெயரும், பெருத்த பொருளிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இவை குறித்து விசாரிக்கவும், முறையற்ற நியமனம் எனில் இவர்களை நீக்கிவிட்டு, தேவைப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமாக தகுதியான நபர்களை பணியில் அமர்த்தவும் கோரி, ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - MEGA’ சார்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமாரிடம், இம்மாதம்06ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, நேரடியாக மனு வழங்கி முறையிடப்பட்டது.
மேலும், தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவிலும், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் ஆணையரிடமும், திருநெல்வேலியிலுள்ள நகராட்சி நிர்வாகத் துறை மண்டல இயக்குநரிடமும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடமும் மனு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு, ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |