காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியில், புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையைத் தோண்டும் பணி அண்மையில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இப்புதிய சாலைப் பணிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த டி.செய்யித் அஹ்மத் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு (வழக்கு எண் WP 20879 / 2013), இம்மாதம் 02ஆம் தேதி வியாழக்கிழமையன்று, நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை தாக்கல் செய்திருந்த செய்யித் அஹ்மத், தற்போது இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் காயல்பட்டினத்தில் நடைபெற்று வருவதாகவும், இவ்வேளையில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெறுவதாகவும், இவ்வாறு புது சாலை போடப்பட்ட பின்பு - குடிநீர் குழாய்களைப் பதிக்க மீண்டும் சாலையைத் தோண்ட வேண்டியிருக்கும் என்றும், இதனால் மக்களின் வரிப்பணம் வீண் விரயம் அடையும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி, இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோரைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |