சிறுபான்மையினர் வசிக்கும் பகுதி என்பதால் - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளதாக, இன்று காலையில் காயல்பட்டினம் வருகை தந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. - அவரது வருகையையொட்டி அங்கு வந்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் இன்று காலை 07.30 மணியளவில், செந்தூர் விரைவுத் தொடர்வண்டி மூலம் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்தடைந்தனர்.
கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் - சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார்.
தொடர்வண்டி நிலைய நடைமேடை பகுதிகளைச் சுற்றிப் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரது வருகையையொட்டி அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தென்னகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகர், சர்வதேச தொடர்புள்ள ஊராகும். இதன் காரணமாக, வெளிநாடு மற்றும் வெளியூர்வாசிகள் இந்நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நகரில் அமைந்துள்ள ரெயில்வே நிலையத்தை இந்நகர பொதுமக்களும், சுற்றுவட்டார ஊர்களான ஆறுமுகநேரி, பேயன்விளை, அடைக்கலபுரம், அம்மன்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணியரும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆறுமுகநேரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் இருக்கின்றபோதிலும், அது சற்று தொலைவிலிருப்பதால், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தையே அவர்களும் பயன்படுத்தும் நிலையுள்ளது. இதன் காரணத்தால், இங்கு அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில், அனைத்து ரெயில் பெட்டிகளும் நிற்கும் அளவிற்கு நடைமேடையை விரிவாக்கியும், உயர்த்தியும், மேற்கூரை அமைத்தும் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கியமான கோரிக்கை. தற்போது இவ்வசதி இல்லாத காரணத்தால், ரெயில் பயணிகள் ரெயிலில் ஏறவும், இறங்கவும் முடியாமல் கீழே விழுந்து விபத்திற்குள்ளாவது அன்றாடக் காட்சியாகிவிட்டது. ஏறவும், இறங்கவும் முடியாதவர்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக திருச்செந்தூர் ரெயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில், இந்த ரெயில் நிலையத்தைப் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மிகவும் இருட்டாக உள்ளது. இதனால், சமூக விரோத செயல்கள் இந்த ரெயில் நிலையத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன.
குடிநீர், சுகாதார வசதிகள், இந்த ரெயில் நிலையத்தில் பயணியருக்கும் இல்லை; இங்கு தங்கி பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இல்லை. இந்த ரெயில் நிலையத்தில் துப்புரவுத் தொழிலாளரும் இல்லை.
கடந்த 29.12.2009 அன்று - அன்றைய மத்திய ரெயில்வே துறை இணையமைச்சர் இ.அகமது அவர்கள் இந்நகருக்கு வருகை தந்து, ரெயில்வே நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, இங்கு நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பணிகள் சிலவற்றை நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டது. அடுத்த சில மாதங்களில் அமைச்சர் அவர்களின் துறை மாற்றப்பட்டு, அவர் வெளியுறவுத்துறை இணையமைச்சாரானார்.
இந்நிலையில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர், நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு, சில பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் இதுவரை தொடங்கப்படவேயில்லை. நாங்கள் விசாரித்து அறிந்த வரையில், ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தக்காரருக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்றும், மற்ற பணிகளுக்கு பண ஒதுக்கீடே செய்யப்படவில்லை என்றும் பலவாறான தகவல்கள் தரப்படுகின்றன.
இடைநின்று போன மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக செய்து தருமாறு கட்சியின் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நானே கூட தென்னக ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. அவர்களும் ரெயில்வே அமைச்சரிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இருந்தும் கூட தென்னக ரெயில்வே அதிகாரிகள் இன்றளவும் இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.
காயல்பட்டினம் சிறுபான்மையினரை உள்ளடக்கிய பகுதி என்பதால், இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிக்கும் வகையில் பணிகளில் மெத்தனம் காட்டுகிறார்களோ என்று கூட எங்களுக்குக் கருதத் தோன்றுகிறது.
ஓர் அரசுக்கு நல்ல பெயரும், கெட்ட பெயரும் ஏற்படுவது - அதன்கீழ் செயல்படும் அதிகாரிகளால்தான். அந்த வகையில், இவர்களது இச்செயல் மத்திய அரசின் மீது இங்குள்ள மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.
எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி - எதிர்வரும் 2014 - பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல், காயல்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஏற்பாடு செய்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற - நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நலக்கமிட்டிகளின் நிர்வாகிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தை நடத்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து கலந்தாலோசிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இன்று நான் காயல்பட்டினம் வந்துள்ளேன். இனியும் கோரிக்கை கண்டுகொள்ளப்படாவிட்டால், இன்னும் பல விதங்களில் போராட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமுள்ளது.
செய்தியாளர்களாகிய நீங்களும், இங்குள்ள மக்களின் பிரச்சினையை உரிய முறையில் அரசு மற்றும் தொடர்வண்டித் துறை நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் பணிகள் முடிக்கப்பட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர மாணவரணி அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.ஏ.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பெத்தப்பா சுல்தான், என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.இசட்.சித்தீக் மற்றும் கட்சியினர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |