இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேறு ஆன்மிக மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் மீலாத் விழாக்கள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட - மஹப்பத்திர் ரஸூல் மீலாது கமிட்டி சார்பில் இவ்வாண்டு முதல் மீலாத் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மீலாத் விழா நிகழ்ச்சி, இம்மாதம் 20ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெற்றது. அன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், சிறிய குத்பா பள்ளியின் முஅத்தின் தாஹா தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது.
அஸ்ர் தொழுகைக்குப் பின் - ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ தலைமையில் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் - ஸெய்யிதினா பிலால் பள்ளியில் இயங்கி வரும் மக்தப் பிலாலிய்யா மற்றும் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இயங்கி வரும் மக்தப் ஸுப்ஹானிய்யா மாணவர்களின் தஃப்ஸ் நிகழ்ச்சி, நஅத் ஷரீஃப் - கஸீதா ஆகிய நபிகளார் புகழ்பாடும் அமர்வுகளும் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக, சுற்றுவட்டாரத்திலுள்ள ஏழை-எளிய பொதுமக்களுக்கு பயன்பாட்டுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இஷா தொழுகைக்குப் பின், “மீலாதும், மவ்லிதும், ஸதக்காவும்” எனும் தலைப்பில், திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிறைவாக, ‘கவிமகன்’ காதர் இயற்றிய நபிகளார் புகழ் பாடு்ம கவிதையை, ஸெய்யிதினா பிலால் பள்ளியின் முஅத்தின் அரபி ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ பாட, நிகழ்ச்சி நெறியாளர் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நன்றி கூறிய பின், மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ‘தபர்ருக்’ எனும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பிலால் என்.எம்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ, கே.எம்.எஸ்.நூர் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எச்.முஹம்மத் ஸுஹைல், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் மீரா நெய்னா, எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, கே.எம்.சுலைமான், பி.எஸ்.நதீன், என்.எம்.ஏ.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ‘மஹப்பத்திர் ரஸூல்’ மீலாத் கமிட்டியினர் செய்திருந்தனர். |