காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
19ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருநெல்வேலி ரீடீமர்ஸ் அணியும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியும் மோதின.
ஆட்டம் துவங்கியது முதல் நிறைவு வரை தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆடிய ஆதித்தனார் கல்லூரி அணி, எதிரணிக்கு கோல் எதுவும் அடிக்க வாய்ப்பளிக்காமல், தன் பங்கிற்கு 3 கோல் அடித்து, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - ஆர்.மஃரூஃப், எம்.எஸ்.எல்.ஷேக் தம்பி, ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் பீர் முஹம்மத் ஆகியோருக்கு, சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர் ‘பிஎச்எம்’ ஷேக்னா ஈரணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இரவு 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் குடும்பத்தினரான எம்.எஸ்.எல்.ஷேக் தம்பி, ஆர்.பாதுல் அஸ்ஹப், ஆர்.நாஸர், ஆர்.மஃரூஃப், எம்.எச்.முஹம்மத் அலவீ, எம்.எச்.அபூபக்கர் ஸித்தீக், எம்.எச்.ஷேக்னா லெப்பை என்ற பிஎச்எம் ஷேக்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதினார். அறிவிப்பாளர் எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார்.
மேடையில் முன்னிலை வகித்தோர் மற்றும் சிறப்பழைப்பாளர்களுக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. 3 போட்டிகளில் 5 கோல்களை அடித்ததுடன், இறுதிப்போட்டியில் முதல் கோலையும் அடித்த ஆதித்தனார் கல்லூரி வீரரும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான அப்துல் லத்தீஃபுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. அதே அணியின் தனபால் என்ற வீரருக்கு, இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசு வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசு, ரீடீமர்ஸ் அணியின் ஜெயராஜ் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது.
அடுத்து, இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற திருநெல்வேலி ரீடீமர்ஸ் அணிக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. பி.எச்.எம். ஃபாமிலி ரெஸ்டாரெண்ட் அனுசரணையிலான ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசை, அதன் அதிபர் ஹாஜி பிரபு ஹபீப் முஹம்மத் வழங்கினார். முன்னாள் கால்பந்து வீரர் (கோல் காப்பாளர்) மர்ஹூம் எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் நினைவாக அனுசரணையளிக்கப்பட்ட ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசை - அவர்களின் மக்கள் வழங்கினர்.
அடுத்து, இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணிக்கு பணப்பரிசு வழங்கப்பட்டது. பி.எச்.எம். ஃபாமிலி ரெஸ்டாரெண்ட் அனுசரணையிலான ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், மர்ஹூம் எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் நினைவாக ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
காலரி பேர்ட்ஸ் அணி மேலாளர் கலாமீ யாஸர் அரஃபாத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா
முந்தைய போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |