அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகளின் சார்பில், கட்சியின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரின் 97ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் செய்யது காசிம் முன்னிலை வகித்தார். சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா உட்பட நிர்வாகிகள் சிலர் பேசினர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மெய்தீன் பேசுகையில், கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியே கொண்டு வருவது தொடர்பாக நகர முஸ்லிம் லீக் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை விமர்சித்துப் பேசினார்.
காயல்பட்டினம் வழியாக வரவிருந்த கிழக்கு கடற்கரைச் சாலையை - வழி மாற்றி திட்டமிட, திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி முயற்சி செய்தபோது, அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த முஸ்லிம் லீக் அப்போது கேட்காமல், ஆட்சி மாறி - திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்து தீர்மானமியற்றுவது, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சார வியூகம் வகுப்பதாகவே உணர முடிவதாக அவர் கூறினார்.
அடுத்து பேசிய - அதிமுக ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், திமுக ஆட்சியில் காயல்பட்டினத்தில் குறிப்பிடும்படி எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அடுத்து, அண்மையில் அதிமுகவில் இணைந்த - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேசினார்.
தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட தலைமைக்கு நன்றி கூறி உரையைத் துவக்கிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் காயல்பட்டினத்தில் இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதையும், நகரில் பயோகேஸ் திட்டம் அமைய 90 லட்சம், பழைய நகர்மன்றக் கட்டிடத்திற்குப் பகரமாக புதிய கட்டிடம் கட்ட 1.5 கோடி நிதியொதுக்கித் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் - திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜெயதுரை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் - கடமைகளை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், 58 சதவீத கூட்டங்களில் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்விகளிலும் கூட - மற்ற தொகுதிகளுக்காகவும், பிற மாநிலங்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறிய அவர், காயல்பட்டினத்திற்குள்ளேயே மத்திய அரசுக்கான பல கோரிக்கைகள் காத்திருக்க (உதாரணமாக காயல்பட்டினம் ரயில் நிலையம் நடைமேடை பிரச்சனை), அவைகளை புறக்கணித்த நிலையில் இதர பகுதிகளுக்கு கோரிக்கை அளித்துள்ளதையே தான் விமர்சிப்பதாகவும் கூறினார்.
அடுத்து ஜெனிஃபர் சந்திரன் உரையாற்றினார்.
திமுக தலைவர், தன் குடும்பத்திற்காக கட்சியை அழித்துக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக தலைமை - தன்னலமற்று மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருதாகக் கூறினார்.
நிறைவாக சிறப்புப் பேச்சாளர் வைகை பாரதி வாஹிது பேசினார். மறைந்த எம்.ஜி.ஆர். வரலாற்றுச் சரிதங்களைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், நடப்பு அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 40 இடங்களையும் வெல்லும் என்று கூறினார்.
புரட்சி சங்கர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், கட்சியினரும், நகர பொதுமக்களும் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.ஏ.எஸ்.சேகு அப்துல் காதிர் செய்திருந்தார்.
களத்தொகுப்பு & படங்கள்:
A.K.இம்ரான்
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர், காயல்பட்டணம்.காம்)
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:35 pm / 22.01.2014] |