இந்திய ரிசர்வ் வங்கி - 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சிட்டு வெளியிட்ட ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு நேற்று
(ஐனவரி 22; புதன்கிழமை) வெளியானது.
வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி - மார்ச் 31, 2014 க்கு பிறகு, 2005 ஆம் ஆண்டிற்கு முன் அச்சிட்டு வெளியிடப்பட்ட அனைத்து இந்திய ரூபாய் நோட்டுகளையும்
வாபஸ் வாங்கி விடும். ஏப்ரல் 1, 2014 க்கு பிறகு, பழைய (2005 க்கு முன்னர் அச்சிடப்பட்ட) நோட்டுகளை, வங்கிகளை அணுகி மாற்றிக்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது குறித்த மேலறிவிப்பு வரும் வரை, வங்கிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்கும்.
பொது மக்கள் 2005 ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளை எளிதாக கண்டறியலாம். 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு அச்சிடப்பட்ட நோட்டு ரூபாய் நோட்டுகளின் பின் பக்கத்தின் அடியில், அச்சிடப்பட்ட ஆண்டு இருக்கும்.
2005 க்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு (பின் பக்கத்தின் அடியில் ஆண்டு அச்சிடப்படவில்லை)...
2005 க்கு பின்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு (பின் பக்கத்தின் அடியில் ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது)...
2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் அச்சிடப்பட்ட இந்திய ரூபாய் தொடர்ந்து சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நோட்டாகவே (Legal Tender) இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்துகிறது. இதன்படி வங்கிகள் - தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் (Customers), வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கும் (Non-Customers), பழைய நோட்டுகளை மாற்றி வழங்கவேண்டும்.
ஜூலை 1, 2014 க்கு பிறகு, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, 10 எண்ணிக்கைகளுக்கு மேல் மாற்ற விரும்பும், வாடிக்கையாளர் அல்லாதவர்களிடம் இருந்து (Non-Customers) வங்கிகள் - அவரின் பெயர் மற்றும் இருப்பிடம் விபரங்களை கோரும்.
இந்திய ரிசர்வ் வங்கி - பொது மக்களை இவ்வறிவிப்பு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுகொள்கிறது. பழைய ரூபாய்
நோட்டுகளை வாபஸ் வாங்கும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:45 pm / 23.01.2014] |