காயல்பட்டினத்தில், கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை அடைக்கப்பட்டுள்ளதோடு, துணை வட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் அங்குள்ள குடிசை அகற்றப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் - டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் பின்புறமாக அமைந்துள்ளது - கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடை. பொது ஓடையான இதில் மழை நீர், விவசாயக் கழிவு நீர், உப்பள கழிவு நீர் உள்ளிட்டவை கடலில் கலக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இந்தப் பொது ஓடையில், பல்லாண்டு காலமாக இந்த தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால், கடல் செந்நிறமாகக் காட்சியளிப்பதும், மீன்களும் - கடல் வாழ் அரிய உயிரினங்களும் கூட்டங்கூட்டமாக செத்து ஒதுங்குவதும் வாடிக்கையாகிப் போனது.
ஆண்டு முழுவதும் தொழிற்சாலையில் சேரும் கழிவு நீர் இந்த ஓடையில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவமழையின்போது கடலில் திறந்து விடப்படுவதாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்தப் பொது ஓடையை சில கூலியாட்கள் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, அவ்விடத்தில் நாள் கூலிக்குப் பணியாற்றி வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், 24.12.2014 அன்று காலை 08.30 மணியளவில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அங்கத்தினர் (KEPA) ஓடையை நேரில் சென்று பார்த்தபோது, ஓடையில் பணியாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஏற்பாட்டில் அங்கு பணியாட்கள் ஓடையில் வேலை செய்வது விசாரித்து அறியப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மண்டல அலுவலருக்கும், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்புகொண்டு முறையிடப்பட்டது.
மீண்டும், அன்று மதியம் 03.30 மணியளவில், KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட குழுவினர் பொது ஓடைக்கு நேரில் சென்று பார்த்தனர்.
தகவலின் பெயரில் அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் KEPA சார்பில் விபரம் தெரிவிக்கப்பட்டது.
ஓடை அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும், பணியாட்கள் அங்கு பணியாற்றிய சுவடுகளையும் நேரில் பார்த்தறிந்த அவர், பணியாட்கள் ஓய்வெடுப்பதற்காக ஓடைக்கருகில் கட்டப்பட்டிருந்த குடிசையை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தி விட்டு தகவல் தருமாறு காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு உத்தரவிட்டதோடு, அக்குடிசைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றார்.
அடுத்த சில நாட்களில் குடிசை அகற்றப்பட்டுவிட்டதாக துணை வட்டாட்சியருக்கு, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 22ஆம் நாள்) காலை 08.00 மணியளவில் ஓடையருகே சென்று பார்த்தபோது, குடிசை அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. அத்துடன், கழிவு நீரோடையும் மணல் மூடைகளைக் கொண்டு வழமை போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து, துணை வட்டாட்சியருக்கு தொலைபேசி வழியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாளன்று - டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் விதிமீறலைக் கண்டித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) சார்பில் முழு கடையடைப்பும், அன்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டமும், பின்னர் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், இரவில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10ஆம் நாளன்று - சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் பெருந்திரளாகச் சென்று – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளும் சமர்ப்பிக்கப்பட்டது. அது முதல் இன்றளவும் காயல்பட்டினம் கடற்பரப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரியும் இருவரும், ஓடைப் பணிகளை குத்தகை எடுத்துள்ளதாகக் கூறப்படும் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கடலில் நிறமாற்றம் எதுவுமில்லையெனினும், கழிவு நீர் கலக்கும் ஓடையில் தொடர்ந்து பணியாளர்கள் பணியாற்றி வருவது பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்)
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |