தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு இரண்டு குவிவிழிக் கண்ணாடிகள் (Convex Mirrors) நிறுவப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தில், முக்கியமான சாலைகளின் சந்திப்பில், இரு புறங்களிலிருந்தும் வரும் வாகனங்கள் ஒன்றையொன்று அறியாமல் வருகையில் ஏற்படும் எதிர்பாரா போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க - அவ்வாறான இடங்களில் குவிவிழிக் கண்ணாடியை நிறுவுவதென, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற - அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, முதற்கட்டமாக காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையில், கடந்த நவம்பர் மாதம் 12ஆம் நாளன்று ஒரு குவிவிழிக் கண்ணாடி நிறுவப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற - அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், மேலும் 5 குவிவிழிக் கண்ணாடிகளை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இன்று (ஜனவரி 21) காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு, தைக்கா பஜாரிலிருந்தும் - எல்.எஃப். வீதியிலிருந்தும் வருவோர் பயன்பாட்டிற்காக ஒன்றும், தைக்கா பஜாரிலிருந்தும் - கூலக்கடை பஜாரிலிருந்தும் வருவோர் பயன்பாட்டிற்காக ஒன்றும் என இரண்டு குவிவிழிக் கண்ணாடிகள் நிறுவப்பட்டுள்ளன.
தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணைச் செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ குவிவிழிக் கண்ணாடிகளை நிறுவினார். கலாமீ யாஸர் அரஃபாத், தக்வா உறுப்பினர் எம்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ உள்ளிட்டோர் துணைப்பணியாற்றினர்.
போக்குவரத்து காரணமாக கண்ணாடியில் படியும் தூசுகளைத் துடைத்தால் கண்ணாடியின் தன்மை பாதிக்கப்பட்டு பயன்பாடற்றுப் போய்விடும் என்பதால், அது மாசடையும்போதெல்லாம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுத்தம் செய்திட - பேருந்து நிலையம் அருகில் கடை வைத்திருக்கும் பண்டாரம் என்பவர் தானாக முன்வந்து பொறுப்பெடுத்துக்கொண்டார். அவருக்கு, தக்வா அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. |