வட்டியில்லா நிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ ஆகும். வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இதுகுறித்த அறிமுகம் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம், கடந்த 2013 டிசம்பர் 29ஆம் நாளன்று, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக கிளை துவங்குவதாயின் - அதற்கான முறைமைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினத்தில் ‘ஜன்சேவா’ கிளையை அமைத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 19) மாலை 17.00 மணியளவில், எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துப் பரிமாறவுள்ளார். அவருடன், கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் மற்றும் மாவட்ட - நகர நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள - நகரின் ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் மற்றும் நகரப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கூட்ட ஏற்பாடுகளை, ‘ஜன்சேவா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.இப்னு ஸஊத் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர். |