54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் புது டில்லியில் செப்டம்பர் 27 அன்று துவங்கின. மூன்று பிரிவுகளாக (சப்-ஜூனியர் ஆண்கள், ஜூனியர் பெண்கள், ஜூனியர் ஆண்கள்) நடைபெற்ற இப்போட்டிகள் - அக்டோபர் 19 அன்று நிறைவுற்றன.
தமிழகம் சார்பாக 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்ற எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி - தான் பங்கேற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியை சமம் செய்து, இரு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
சுற்றுப்போட்டியின் நிறைவில், வெற்றி - தோல்வி அணியினருக்கான பரிசுகள் தவிர, சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த கோல் காப்பாளர் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவை தவிர, இச்சுற்றுப்போட்டியின் தரமான வீரர்களாக (Oustanding Players) 25 பேர் - அதற்கென நியமிக்கப்பட்டிருந்த சிறப்புக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் ஊக்கத்தொகையும் (SCHOLARSHIP) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலை - தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வீரர்களுள், தமிழகம் சார்பாக விளையாடிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணியின் கோல் காப்பாளர் முஹம்மத் உமர் ஷாஹிதும் ஒருவராவார். அவருக்கான பரிசு ரூபாய் 20 ஆயிரம் தொகை - அண்மையில் காசோலையாக அவருக்கு - சுப்ரதோ கோப்பை போட்டி ஏற்பாட்டாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாராட்டும் வகையில், இன்று காலை 09.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் ஒன்றுகூடலின்போது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர் ஒன்றுகூடலின் வழமையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் - மாணவரின் இச்சாதனை குறித்து அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், மாணவரைப் பாராட்டிப் பேசியதுடன், சுப்ரதோ கோப்பை போட்டி ஏற்பாட்டாளர்களால் அனுப்பி வைக்கப்பட்ட காசோலையை மாணவர் உமர் ஷாஹிதுக்கு வழங்கினார்.
பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் - ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
|