இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திடும் நோக்குடன் பல்வேறு செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் - மாவட்ட தேர்தல் அலுவலருமான ம.ரவிக்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுதேர்தலுக்கன அட்டவணை வெளியிட்டுள்ளமையால், தேர்தல் நடத்தை விதிகள் 05.03.2014 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
>>> அரசியல் கட்சி / வேட்பாளர்கள் பொது கூட்டம் நடத்துவதற்கு விரும்பும் பட்சத்தில், கூட்டம் நடைபெறும் நாள், இடம் மற்றும் நேரம் குறித்த விபரங்களை காவல் துறைக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தகவல் தெரிவித்து, காவல்துறை ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
>>> ஓலிபெருக்கியுடன் வாகன பிரச்சாரம் செய்ய காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோரின் தடையில்லா சான்று பெற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கியை மட்டும் பயன்படுத்த வேண்டும் கூம்பு வடிவிலான ஒலிப்பெருக்கியினை பயன்படுத்தக்கூடாது.
>>> தேர்தல் கையேடுகள் சுவரொட்டிகள் அச்சிட்டவர் மற்றும் வெளியிடுபவர் பெயர் கண்டிப்பாக குறிப்பிட்டு வெளியிடுதல் வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் தனியார் இடங்களின் உரிமையாளரின் அனுமதி பெற்றிருந்தாலும், சுவர் விளம்பரங்கள், கொடி நடுதல், விளம்பரத் தட்டி கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுதுதல் கூடாது.
>>> அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் கிராமப் பகுதிகளில் தனிநபர், நிலம், கட்டிடம் ஆகியவற்றில் அவருடைய அனுமதியின்றி கொடி நடுதல், விளம்பரத் தட்டி கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுதுதல் ஆகியவைகளை அவர்களுடைய ஆதரவாளர்கள் முலம் செய்வதை அனுமதிக்கக் கூடாது.
>>> அரசு கட்டிடங்களில் கொடி நடுதல், விளம்பரத் தட்டி கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கோஷங்கள் எழுதுதல் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது.
>>> தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறும் இடங்களில் தட்டி போர்டுகள் தற்காலிகமாக வைத்துக் கொள்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முன் அனுமதி பெறவேண்டும். கூட்டம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அகற்றப்படாவிடில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு, அவற்றுக்கான செலவினமானது சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரது செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
>>> மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற்ற விளம்பர வாகனங்கள் நீங்கலாக, பிற வாகனங்களில் கொடி மற்றும் பிற வகை விளம்பரங்கள் செய்யக் கூடாது. ஒலி பெருக்கியினை இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணிவரை பயன்படுத்த கூடாது.
>>> தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குறித்த புகார்களை 1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். thoothukudi2014complaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
>>> அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட சுவரெழுத்துக்கள், சுவரெட்டிகள், பேனர்கள், கட்அவுட்கள் அனைத்தையும் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அரசு செலவில் மேற்படி விளம்பரங்கள் அகற்றப்பட்டு, சம்மந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
>>> தனி நபரோ, அரசியர் பிரமுகர்களோ, வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளோ ரூ.50000 தொகைக்கு மேல் பணத்தை பொது இடங்களில், தேர்தல் நன்னடத்தை தொடங்கிய நாள் முதல் தேர்தல் முடிவடையும் வரை நேரத்தில் வைத்திருக்கக் கூடாது.
>>> வேட்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ, போஸ்டர்கள் அல்லது மது போன்ற ரூ.10000 தொகைக்கு மேல் மதிப்புள்ள - தடை செய்யப்பட்ட பொருள்கள், பரிசுப் பொருட்கள் இவற்றுடன் வாகனத்தில் இருந்தால் அந்த வாகனம் கைப்பற்றப்படும்.
>>> பெரிய அளவில் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் அன்னதானம் நடத்துதல் கூடாது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேர்தல் குறித்த விளம்பரங்களோ பிரச்சாரங்களோ செய்யக் கூடாது.
>>> வங்கியிலிருந்து வங்கி ஏஜெண்டுகள் பணம் கொண்டு செல்லும்போது, வங்கிகளால் உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வங்கியிலிருந்து தனிநபர் ரூ.100000 தொகைக்கு மேல் பணம் எடுக்கும்போது, உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
>>> ஒட்டளிப்பவர்களுக்கு பணம் வழங்குதல், பரிசுப் பொருட்கள் கொடுத்தல், மது வகைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்குதல் குற்றமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (Representation of People Act 1951)இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
>>> அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
>>> 09.03.2014 அன்று, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்கப்டாதவர்கள் படிவம் 6இல் தங்களது பெயரை சேர்க்க மனு செய்யலாம்.
இவ்வாறு, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம் ஆகியோரும், மாவட்டத்தின் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |