இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, வாக்களிக்கத் தகுதியிருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போன வாக்காளர்கள் தமது பெயர்களைச் சேர்ப்பதற்காக இம்மாதம் 09ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) - அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுமென, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், நாளை நடைபெறவுள்ள - விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் குறித்த செய்திக்குறிப்பு:-
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருகிற மார்ச் 09ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து 1413 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேற்படி முகாமில், அந்தந்தப் பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டுக் கொள்ளலாம். பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பின் - அன்றைய நாளிலேயே படிவம் 6ஐப் பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (Booth Level Officer) வழங்கலாம். 01.01.2014 நாளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தகுதியுடையோர் ஆவர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டிருந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், நகல் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Duplicate Cards) பெற - அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் செய்யலாம். நகல் அடையாள அட்டையைப் பெற ரூபாய் 25 கட்டணமாக அரசு கருவூல செலுத்துச் சீட்டின் மூலமாகவோ, பணமாகவோ செலுத்த வேண்டும். உரிய படிவம் 001Cயில் விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் இரண்டும் ஒட்டப்பட வேண்டும்.
நகல் அட்டையில் Duplicate என அச்சிட்டு வழங்கப்படும். ஏற்கனவே இருந்த அடையாள அட்டையின் எண் நகல் அட்டைக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |