இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, வாக்களிக்கத் தகுதியிருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போன வாக்காளர்கள் தமது பெயர்களைச் சேர்ப்பதற்காக இம்மாதம் 09ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை - அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுமென, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு முகாம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுமுள்ள 1413 வாக்குச் சாவடிகளிலும், விடுபட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று (மார்ச் 09) காலை 10.00 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேனிலைப்பள்ளி, புனித மரியன்னை மேனிலைப்பள்ளி, பி.எம்.சி.மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற முகாமை, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் பார்வையிட்டார்.
காயல்பட்டினம் நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளனவா என அந்தந்த பகுதிகளின் வாக்காளர்கள் பார்த்துச் சென்றனர். தகுதியிருந்தும், பெயர் விடுபட்ட வாக்காளர்கள், படிவம் 6ஐப் பூர்த்தி செய்து வழங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற விண்ணப்பித்தனர்.
அத்துடன், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டிருந்து, அடையாள அட்டை இல்லாதவர்கள் நகல் அடையாள அட்டையைப் பெற்றிட ரூபாய் 25 செலுத்தி விண்ணப்பித்துச் சென்றனர். முகாம் பணிகளை, காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி வைரமுத்து பார்வையிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |