இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக, ஐக்கிய சமாதானப் பேரவையின் சார்பில், இம்மாதம் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 19.00 மணியளவில் - காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைமை நெறியாளர் மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, சொளுக்கு எஸ்.எம்.கபீர், எஸ்.ஏ.பீர் முஹம்மத், எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்தை, ஐக்கிய சமாதானப் பேரவையின் இளைஞரணி மாநில செயலாளர் கே.முஹம்மத் ஆஷிக் நெறிப்படுத்தினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - ஐக்கிய சமாதானப் பேரவை தலைமை நெறியாளர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துவக்கவுரையாற்றினார். அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.முஹம்மத் ஷாஜஹான் நன்றி கூறினார்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நகரில் வீதி வீதியாக வாகன பரப்புரை செய்துகொண்டிருந்த திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் மற்றும் அவரது சகோதரியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் ஆகியோர் மேடைக்கு வந்து, ஆதரவு கோரி உரையாற்றினர். ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
அவ்வமைப்பின் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. யார் மதவாத சக்திகளுக்கு எதிராக உள்ளனர் என்பதை வைத்தே இதை நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் - மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காகவும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. அது மட்டுமின்றி, தமிழகத்தின் மொத்த 40 வேட்பாளர்களுள் 4 பேர் முஸ்லிம்கள் என நியமித்ததன் மூலம் அது தனது பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று தனது ஏணி சின்னத்தில் களம் காண்பதற்கும் அது இசைவு தெரிவித்திருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, அதிமுகவோ ஒரேயொரு முஸ்லிமை பெயருக்கு வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பொது சிவில் சட்டத்தை ஆதரித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியபோது, சமுதாயத்தை மறந்து அதை ஆமோதித்து நன்றி விசுவாசத்தைக் காட்டியமைக்காக, அன்வர் ராஜாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜகவுடன் கைகோர்க்கும் என்பதை கண் முன் நிரூபிக்கும் வகையிலேயே அதன் தேர்தல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
நமது தூத்துக்குடி தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக என்.பி.ஜெகன் களமிறங்கியுள்ளார். அவர் படித்தவர், செயல்திறன் மிக்க இளைஞர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நமது வாக்குகளை மொத்தமாக அளிக்க வேண்டியது அவசியம்.
அதை விட்டுவிட்டு மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மதவாத சக்திகளுக்குத் துணையாகவே அமையும். அதிமுகவுக்கு வாக்களித்தால் அது நேரடியாக மதவாத சக்திக்குத் துணை போகும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகியவற்றுக்கு வாக்களிப்பதால் - அவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில், பிரியும் வாக்குகளும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். ஆம் ஆத்மி கார்ப்பரேட் பணமுதலைகளின் ஆதரவு பெற்ற கட்சி என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.
இத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், இனி வருங்காலங்களில் இவ்வமைப்புகள் அனைத்தும் - தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மொத்தமாக ஓரணியில் திரண்டு, நம் சமுதாயத்திற்குத் தேவையான மொத்த தொகுதிகள் இத்தனை தர வேண்டும் என கேட்டுப் பெறும் அளவுக்கு வலிமையடைய வேண்டும். அதன் பின், அமைப்புகள் தமக்கிடையில் தொகுதிகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். இதனால், நம் சமுதாயப் பிரதிநிதிகள் பலர் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் வலிமையுடன் அங்கம் வகிக்க இயலும்.
இந்தப் பணியை, இத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஐக்கிய சமாதானப் பேரவை முன்னெடுக்கும். அதற்காக தீவிரமாக உழைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மவ்லவீ ஹாமித் பக்ரீ பேசினார். இக்கூட்டத்தில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அங்கத்தினர் உட்பட - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |