காயல்பட்டினம் கடற்கரையில் குப்பைகள் தேங்கிட காரணமாக வேண்டாம் என, அங்கு திண்பண்டங்களை விற்போரிடம், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் நேரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று 18.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரைக்கு - நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி மற்றும் பணியாளர்களுடன் வந்த சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அங்கிருந்த திண்பண்ட வணிகர்களை சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம் திண்பண்டங்கள் வாங்கிச் செல்வோரிடம், காகிதங்கள், வெற்றுக் கோப்பைகள் உள்ளிட்ட குப்பைகளை - அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடக் கூறுமாறு அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
நாளை முதல் கடற்கரையிலிருக்கும் ஒவ்வொரு கடைக்கு அருகிலும் - குப்பை சேகரிக்கும் பெட்டி ஒன்று நகராட்சியின் சார்பில் வைக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் குப்பைகளை அவற்றில் கொட்டச் செய்ய வேண்டிய பொறுப்பை கடைக்காரர்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் காயல்பட்டணம்.காம் இடம் பேசிய சுகாதார ஆய்வாளர், கடற்கரை கடைக்காரர்களை ஒழுங்குபடுத்த முறையான செயல்திட்டம் விரைவில் வகுத்து செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறினார்.
நிறைவில், நகராட்சிப் பணியாளர்களும், அவர்களோடிணைந்து பொதுமக்களுள் சிலரும் கடற்கரையில் பரவலாகக் கிடந்த காகிதக் குப்பைகளைச் சேகரித்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
கடற்கரை நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |