இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று காயல்பட்டினத்தில் வீதி வீதியாக வாகன பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
செல்லும் இடங்களில் அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள - “முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு?” என்ற தலைப்பிலான பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளான ‘தேக்’ முஜீப், சாளை முஹம்மத் அப்துல் காதிர் உள்ளிட்ட குழுவினர் இப்பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |