நடப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று 18.00 மணியுடன் நிறைவடைவதையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர், “பாதிப்பை ஏற்படுத்தும் டி.சி.டபிள்யு. பற்றி” என்ற தலைப்பிலான பிரசுரத்தை வீடு வீடாக வினியோகித்து, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
தேர்தல் பரப்புரை இன்று 18.00 மணியுடன் நிறைவடைவதையொட்டி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர்.
வீதி வீதியாக வாகன பரப்புரை செய்யும் அவர்கள், அண்மையில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPAவிடம் அதன் வேட்பாளர் சமர்ப்பித்த கடித வாசகங்களை உள்ளடக்கி, “பாதிப்பை ஏற்படுத்தும் டி.சி.டபிள்யு. பற்றி...” என்ற தலைப்பிலான பிரசுரங்களை வினியோகித்து, துடைப்பம் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |