தமிழகத்தில் திராவிட கட்சிகள், தாம் வெற்றிபெற்றால் யாரைப் பிரதமராக்க ஆதரிப்பது என்று தெரிவிக்காமல், கைக்குட்டை அரசியல் நடத்துவதாக, காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு கோரி நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஏ.பி.சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார்.
பொதுக்கூட்டம்:
அவருக்கு ஆதரவு கோரும் முகமாக காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இம்மாதம் 21ஆம் நாள் திங்கட்கிழமை 19.30 மணியளவில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஹாங்காங் ஏ.எஸ்.ஜமால் முன்னிலை வகித்தார். முகைதீன் பிச்சை வரவேற்றுப் பேசினார். முஸ்தஃபா கமால், ஆசிரியர் அருள்ராஜ், ஜாஹிரா பானு ஆகியோர் கருத்துரையாற்றினர்.
என்.ஷாஜஹான் உரை:
என்.ஷாஜஹான் தலைமைரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
தமிழகத்தில் - குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் இன்று ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் நின்று போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.பி.சி.வி.சண்முகம் மிகவும் நல்லவர்.
யாருடைய உம்றா பிரார்த்தனை ஏற்கப்படும்?
இங்கே - இதே மேடையில் சில நாட்களுக்கு முன் பேசிய எனது மைத்துனர் காயல் மகபூப் அவர்கள், தான் உம்றா சென்றபோது, கஃபா திரைச்சீலையைப் பிடித்து திமுக வெற்றிக்காக துஆ கேட்டதாகக் கூறிச் சென்றிருக்கிறார். நான் கேட்கிறேன்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி. மற்ற இடங்களில் காங்கிரஸ் உடன் கூட்டணி. அப்படியானால், இவர் உம்றா சென்றது போல கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் லீகர்களும் சென்றிருப்பார்கள்தானே...? இவர் திமுக வெற்றி பெற பிரார்த்தித்தது போல அங்கே அவர்கள் சோனியாவுக்காக பிரார்த்தித்திருப்பார்கள். அல்லாஹ் யாருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? பலருடைய பிரார்த்தனையையா, இந்த ஒருவருடையதையா?
ஆறாம் கடமை:
அதுபோல, திமுகவுக்கு வாக்களிப்பது முஸ்லிம்களின் ஆறாவது கடமை போல என முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேசியிருக்கிறார்.
நான் கூற விரும்புவதெல்லாம், தயவுசெய்து அரசியல் தளங்களில் மார்க்கத்தை இழுக்காதீர்கள். அது நல்ல விளைவை ஏற்படுத்தாது. தேவையற்ற விவாதத்திற்கே வழி வகுக்கும்.
மவ்லவீ ஹாமித் பக்ரீக்கு மறுப்பு:
அடுத்து, இதே மேடையில் ஹாமித் பக்ரீ ஆலிம் பேசிச் சென்றார். அவர், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு என்ற இந்த நிலையை எடுப்பதற்கு முன், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக என் மூலம் முன்முயற்சி எடுத்தார். அது கைகூடாமல் போகவே, தற்போது திமுக என்கிறார். இதைப்பற்றி இன்னும் விரிவாக நான் சொல்லத் தேவையில்லை.
ஆம் ஆத்மி யூதர்களின் கைக்கூலி:
அடுத்து, இதே ஊரில் ஆம் ஆத்மி கட்சிக்காக இளைஞர்கள் களமிறங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் யூதர்களின் கைப்பாவைகள் ஆவர். 30 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டி, மக்கள் பணம் பல ஆயிரம் கோடியைச் செலவிட்டு, இன்று கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உருவாகி உற்பத்தியையும் துவக்கவிருக்கும் நிலையில், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களது பண உதவியுடன் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மின் பற்றாக்குறையால் நம் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்க, இதுபோன்ற உற்பத்திகளை வேண்டாம் என உதறுவது எந்த வகையில் மக்கள் நலன் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
டி.சி.டபிள்யு. ஆலையை மூடச் சொல்வது அபத்தம்:
டி.சி.டபிள்யு.வை மூட வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். அதை மூடுவது சாத்தியமா? அதை நம்பி 7500 குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டுதான் பேச வேண்டும். எனினும், அதன் கழிவுகள் விஷயத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, அதற்கான மாற்று ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கலாமே தவிர, மூடச்சொல்வது சரியல்ல. இன்னும் சொல்லப்போனால், நமதூர் காயல்பட்டினம் நகராட்சியின் வருமானத்தில் பெரும்பங்கு இந்த ஆலையின் வரிப்பணம்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இவ்வாறு என்.ஷாஜஹான் பேசினார்.
குமரி மகாதேவன் உரை:
குமரி மகாதேவன் சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
காங்கிரஸை ஆதரிப்பதே அறிவுடைமை:
நடக்கவிருப்பது பஞ்சாயத்து தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ அல்ல. இது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். இத்தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸை ஆதரிப்பதே அறிவுடைமையாகும். மாநிலக் கட்சிகளை ஆதரிப்பது எதிர்பார்க்கும் பயனைத் தராது.
பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்த காயிதேமில்லத்:
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, முஸ்லிம் மக்கள் நலனுக்காகப் போராடிக் கொண்டிருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களை - பாகிஸ்தான் வருமாறும், அந்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறும் ஜின்னா கூறினார். அதை வலிமையாக மறுத்த காயிதேமில்லத் அவர்கள், இந்தியாவில்தான் நான் இருப்பேன்... இந்திய மக்களுக்காகத்தான் வாழ்வேன்... என்று கூறிவிட்டார்.
பதவியை எதிர்பாராமல் நாட்டிற்காக வாழ்ந்தவர்கள் காங்கிரஸார்:
எல்லா நாட்டிலும், விடுதலைப் போராட்டத்திற்கு யார் தலைமை வகித்தனரோ அவர்கள்தான் விடுதலை பெற்ற பிறகு அந்நாட்டின் தலைவர்களாகவும் ஆயினர். ஆனால் நம் நாட்டிலோ காந்தி தலைவராகவில்லை. தலைமையை ஏற்க வேண்டிய அத்தருணத்தில், நாட்டில் இந்து - முஸ்லிம் கலவரம் நடந்ததால், அதை அமைதிப்படுத்துவதிலேயே கருத்தாய் இருந்து, கலவரப் பகுதியிலேயே முகாமிட்டவர் காந்தியடிகள்.
சத்தாம் ஹுஸைன் குவைத்தைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட போரில், அந்நாட்டிலிருந்த வெறும் 67 அமெரிக்கர்களில் 66 பேரை உயிருடன் அழைத்துச் சென்றது அமெரிக்கா. அப்போது இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அங்கு பணியாற்றினர். முறையான ஏற்பாடுகளை இந்தியா செய்தால், அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க தான் ஆயத்தமாக உள்ளதாக சத்தாம் கூறியும், அன்றைய அரசு அதை ஒழுங்காகச் செய்யவில்லை.
ஆக, முஸ்லிம்களுக்கு காங்கிரஸை விட வேறு யார் பாதுகாப்புகளைத் தந்திட இயலும் என்பதை உணர்த்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன்.
சுயநலனுக்காக இயங்கும் மாநிலக் கட்சிகள்:
நரேந்திர மோடி பிரதமரானால், சுயநலனுக்காக திமுக அவர் பக்கம் போகாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உத்தரவாதம் தருமா?
தமிழகத்தில் ஜெயலலிதாவும், கலைஞரும் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி கலைஞர் கூட்டணியை விட்டும் விலகுவதாகக் கூறினார். காங்கிரஸ் செய்த துரோகங்களைப் பட்டியலிட முடியுமா அவரால்? “நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி” என்று இந்த தமிழகத்தில் அவரைச் சொல்ல வைத்தது எது? நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்! மக்கள் நலன்களையெல்லாம் விட, தன் மகள் கனிமொழி, ராசாவின் நலனே அவருக்குப் பெரிது. அவர்கள் மீதான வழக்குகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவே அவர் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம் - எனக்கு தகவல் ஒளிபரப்புத்துறைதான் வேண்டும், கப்பல் போக்குவரத்துத் துறைதான் வேண்டும் என அவர் குறிப்பிட்டுக் கேட்கக் காரணம் இருக்கிறது. அத்துறைகளில்தான் பல்லாயிரம் கோடிகளை அனுபவிக்க முடியும். அதை அடைவதற்காக அவர் எதையும் செய்வார்.
தொலைபேசியில் புரட்சி:
ஒரு காலத்தில் வீட்டில் தொலைபேசி இணைப்பு இருந்தால் அவர் பெரிய பணக்காரர். ஆனால் இன்றோ, நகராட்சியின் துப்புரவுப் பணியாளர் கூட ஒரு கையில் துடைப்பத்தை வைத்து கூட்டிக்கொண்டே மறு கையில் கைபேசியை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் இந்த மாற்றத்திற்குக் காரணம் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியல்லவா? எல்லோரும் கேலி செய்த நேரத்தில் அவற்றைப் பொருட்படுத்தாமல் சாதித்துக் காட்டியவர் அவர்.
மஞ்சள் நோட்டீஸ் பெற்ற மாறன்:
ஒரு காலத்தில் முரசொலி மாறன் பட்ட கடன்களுக்காக அவருக்கு மஞ்சள் நோட்டீஸ் விடப்பட்டது. அப்போது, தான் நடித்த திரைப்படம் ஒன்றின் வருவாயைக் கொண்டு அவரது கடனை அடைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் இன்று அந்தக் குடும்பத்தின் சொத்துக்களோ பல ஆயிரம் கோடிகள். நினைத்தால் ஒரு விமானத்தை வாங்குவதற்கும் அவர்களால் ஆர்டர் செய்ய முடிகிறது என்றால் அது யாருடைய பணம்?
ஆகவே, இந்த நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்காக இயங்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் ஆதரவைத் தர அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு குமரி மகாதேவன் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உரை:
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஞானதேசிகன் சிறப்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
தனிமனிதரை முன்னிறுத்தி களம் காணும் பாஜக:
இன்று நாடெங்கும் மக்களவைத் தேர்தல் பரப்புரை களைகட்டிக்கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் பொதுவான அடிப்படையில் போட்டியிட்டுக் கொண்டிருக்க, பாரதீய ஜனதா கட்சியோ மோடி என்ற தனி மனிதரை முன்னிறுத்தி, தன் கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பெயர்களைக் கூட இருட்டடிப்பு செய்து பரப்புரை செய்துகொண்டிருக்கிறது.
மாநிலக் கட்சிகளின் கைக்குட்டை அரசியல்:
பாஜகவை ஆதரித்தும், எதிர்த்தும் கலைஞரும், ஜெயலலிதா அம்மையாரும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் நடத்துவது கைக்குட்டை அரசியல். ரயிலில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். இருக்கைக்காக ஓரிடத்தை ரிசர்வ் செய்து, அதன் மீது கைக்குட்டையை விட்டுச் செல்வர். அதுபோலத்தான் இவர்களும். தாங்கள் வென்றால் பிரதமர் யார் என்ற கேள்விக்கு இவ்விரு கட்சிகளிடமுமே இப்போது விடையில்லை. வெற்றி பெற்ற பிறகு பேரம் பேசுவதற்காகவே இவர்கள் கைக்குட்டைகளை விரித்து வைத்துள்ளனர்.
காங்கிரஸின் பயனுள்ள தேர்தல் அறிக்கை:
பாஜகவின் தேர்தல் அறிக்கை மதவாதத்தின் பிரதிபலிப்பாகத் திகழ்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் தேர்தல் அறிக்கையோ மக்கள் நலனைக் கருத்திற்கொண்டதாக உள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக 15 அம்ச திட்டங்களையும் அது கொண்டுள்ளது.
பெண்கள் நலன், தகவலறியும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் வீடு போன்ற அரிய திட்டங்களெல்லாம் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் நலனுக்காக மாநிலக் கட்சிகள் செய்ததென்ன?
அன்று காங்கிரஸ் தலைவர் காமராஜ் அணைகளைக் கட்டினார். அதன் பலனை இன்றளவும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் 1962க்குப் பிறகு - தண்ணீர் பற்றாக்குறை என்று சொல்லும் இந்தக் காலகட்டத்தில், பெருவாரியான நீர் கடலில் வீணாகக் கலக்கிறதே? இன்றுள்ள மாநிலக் கட்சிகள் ஒரு அணையையேனும் கட்டியிருப்பார்களா?
இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவே கூறியிருக்க, இந்தியாவில் காங்கிரஸ் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக இங்குள்ள அரசியல் கட்சிகள் பேசுவது அபத்தமில்லையா?
குஜராத் வளர்ச்சி வெறும் சித்தரிப்பே!
எதற்கெடுத்தாலும் குஜராத் முன்னுதாரணம் பேசப்படுகிறதே? உண்மை என்னவென்றால், குஜராத் எல்லா வளர்ச்சிப் பணிகளிலும் 5ஆம், 6ஆம் இடத்தில்தான் உள்ளது. அவர்கள் புகழ்ந்துரைக்கும் எவற்றிலும் உண்மையில்லை. குஜராத்தில் பல ஆயிரம் கோடி அந்நிய முதலீடு என்று பரவலாகப் பேசப்படுகிறது. உண்மை என்னவெனில், அவையனைத்தும் வெறும் அறிவிப்புகளே தவிர இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நரேந்திர மோடி பிரதமராக வருவதை பாஜகவினரே விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
பாஜகவுடன் இணைய முடியாத ஒரே கட்சி காங்கிரஸ்:
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்பாத - சேர முடியாத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சிகள் என்பதுதான் கடந்த கால வரலாறு.
நிலையான அரசு:
கை சின்னத்திற்கு வாக்களிப்பு இந்த நாட்டில் நிலையான அரசு அமைய வழிவகுக்கும். அதன் இறையாண்மை பாதுகாக்கப்படும்.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணுவதும் - அதே நேரத்தில், அதன் அத்துமீறல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதும் காங்கிரஸின் கொள்கை. ஆனால் பாஜகவோ பாகிஸ்தானுடன் எப்போதும் போர் புரிந்து மக்கள் பணத்தை வீணடிக்கவே விரும்புகிறது.
தமிழகத்தில் பாஜக கேலிக் கூட்டணி:
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளைப் பார்க்கும்போது இது ஒரு கேலிக்கூட்டணியாகவே தெரிகிறது. இலங்கையில் தமிழ் ஈழத்தை வலியுறுத்தும் வைகோவும், அதை எதிர்க்கும் பாஜகவும் கூட்டணி. நடிகர்கள் நாட்டைக் கெடுத்தனர் என்று கூறும் டாக்டர் ராமதாஸும், நடிகரான விஜயகாந்தும் ஒரே கூட்டணியில்.
நல்ல வேட்பாளர்:
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஏ.பி.சி.வி.சண்முகம் நல்லவர். நேர்மையானவர். கரை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர். 1989இல் சட்டமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டியவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்காக களமிறங்கியிருக்கிறார். கை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வது உங்கள் கடமை. அதைச் செய்யுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஞானதேசிகன் பேசினார்.
பழக்கடை ரஷீத் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட தலைர் விஜயசீலன், வழக்குரைஞர் சந்திரசேகர், ராஜலிங்கராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் அங்கத்தினரும், அனைத்துப் பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, எம்.எம்.கமால் தலைமையில் காயல் முத்துவாப்பா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நடப்பு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |