இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, காயல்பட்டினத்தில் பரப்புரை செய்வதற்காக - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருபவரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சுப.உதயகுமார் நேற்று (ஏப்ரல் 20) வருகை தருவதாக இருந்தது. உடன்குடி, பெரியதாழை, வீரபாண்டியன்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்த அவர், திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால், நேரமின்மை காரணமாக காயல்பட்டினத்திற்குள் வந்து செல்ல வாய்ப்பின்றிப் போனதாக அக்கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..
இது ஒருபுறமிருக்க, நேற்று மாலையில் காயல்பட்டினம் வருகை தந்த ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன், காயல்பட்டினம் கடையக்குடியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பந்தலில் நின்றவாறு மீனவ மக்களிடம் ஆதரவு கோரி பரப்புரையாற்றினார்.
கடையக்குடி புனித முடியப்பர் தேவாலயத்தின் பங்குத்தந்தை விக்டர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பங்குத்தந்தைக்கு, காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழுவின் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.
கடையக்குடியில் பரப்புரையை முடித்துக்கொண்ட ஆம் ஆத்மி குழுவினர், காயல்பட்டினம் கடற்கரைக்கு வருகை தந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததாலும், கோடை விடுமுறை காலமாக உள்ளதாலும் பொதுமக்கள் கடற்கரையில் அதிகளவில் திரண்டிருந்தனர். அவர்களிடம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ம.புஷ்பராயன் பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரித்தார். நகர பொதுமக்கள் சிலர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.அப்துல் வாஹித், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், அமீர் சுல்தான், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் மற்றும் குழுவினர் இதன்போது உடனிருந்தனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |