இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, திமுகவின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், இம்மாதம் 17ஆம் நாள் வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் பரப்புரையாற்றினார்.
அதிமுக ஆளும் தமிழக அரசின் அவலங்களைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், மத்தியில் நிலையான - மதச்சார்பற்ற ஆட்சி அமைந்திட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று கூறினார்.
திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் நடைபெற்ற இப்பரப்புரை நிகழ்வில், அக்கட்சியின் நிர்வாகிகளான எஸ்.ஐ.காதர், எம்.என்.சொளுக்கு, ஆர்.எஸ்.கோபால் உள்ளிட்டோரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உடனிருந்தனர்.
பரப்புரையை முடித்த பின், உதயசூரியனுக்கு வாக்கு கோரும் பிரசுரத்தை குழுவினர் வினியோகித்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
திமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |