இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு கோரி, காயல்பட்டினத்தில் பரப்புரை செய்வதற்காக - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருபவரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சுப.உதயகுமார் இன்று மதியம் வருகை தருகிறார்.
உடன்குடியிலிருந்து பரப்புரையைத் துவக்கும் அவர், அமலிநகர், பெரியதாழை போன்ற பகுதிகளில் பரப்புரை செய்த பின் காயல்பட்டினம் வந்து பரப்புரையாற்றவுள்ளார்.
காயல்பட்டினத்தில் அவரது பரப்புரைக்கான ஏற்பாடுகளை, ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எஸ்.அப்துல் வாஹித், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், அமீர் சுல்தான் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |