மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் இன்றைய முதல் சுற்றுப் போட்டியில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணி வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இடைவேளையின்போது, இன்று (மே 11) ஹாங்காங்கில் காலமான உறுப்பினருக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று (மே 11) முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், கோவளம் கால்பந்துக் கழகம் - திருவனந்தபுரம் அணியும், ப்ரெஸிடென்ட் லெவன் - தூத்துக்குடி அணியும் களம் கண்டன.
ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ஈரணிகளும் உத்வேகத்துடனும், சம பலத்துடன் விளையாடியபோதிலும், ஒரு கட்டத்தில் தூத்துக்குடி அணி போர்க்குணத்துடன் விளையாடத் துவங்கியது.
தூத்துக்குடி அணிக்காக, என்.முருகேசன் 41ஆவது நிமிடத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த வீரர் லத்தீஃப் 47ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். திருவனந்தபுரம் அணிக்காக அதன் வீரர் அனீஸ் 71ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் நிறைவில், தூத்துக்குடி அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் அணியை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், இன்று வெற்றி பெற்ற தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், சென்னை டான் பாஸ்கோ அணியும் மோதவுள்ளன.
சிறப்பு விருந்தினராக அனிதா!
இன்றைய ஆட்டத்தில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு வீரர்களையும், நடுவர்களையும் ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினர் அறிமுகம் செய்து வைத்தனர்.
மவுன அஞ்சலி:
ஹாங்காங்கில் இன்று காலமான - ஐக்கிய விளையாட்டு சங்க உறுப்பினர் ஜெ.ஏ.எஸ்.முஹம்மத் ஜலீல் என்ற J.A.S.M.Jaleel அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இரண்டாவது பாதி ஆட்டம் துவங்குமுன் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள்:
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து நான்காம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |