மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் இன்றைய இரண்டாவது சுற்றுப் போட்டியில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணி வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று (மே 12) இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், ப்ரெஸிடென்ட் லெவன் - தூத்துக்குடி அணியும், டான் பாஸ்கோ - சென்னை அணியும் களம் கண்டன.
ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை தூத்துக்குடி அணியின் கை ஓங்கியிருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே சென்னை அணி சோர்வுறத் துவங்கியது.
ஆட்டம் துவங்கிய 05ஆவது நிமிடத்தில், தூத்துக்குடி அணி வீரர் ரோஷன், 22ஆவது நிமிடத்தில் முத்து, 40ஆவது நிமிடத்தில் என்.முருகன், 54ஆவது நிமிடத்தில் மீண்டும் முத்து ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, 4-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி முன்னிலையிலிருந்தது.
சென்னை அணிக்காக, 56ஆவது மற்றும் 63ஆவது நிமிடத்தில் ஜி.சிவகுமார் இரண்டு கோல்களை அடித்தார். இதனால், அவ்வணி 2-4 என்ற கோல் கணக்கிலிருந்தது. தூத்துக்குடி வீரர் முத்து 68ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் நிறைவில் 5-2 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம், இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி வீரர் முத்து 3 கோல்களை தனதணிக்காக அடித்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில், கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும், பேங்களூர் கிக்கர்ஸ் – பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து ஐந்தாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |