ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பின்பும் காலி செய்யப்படாத சைக்கிள் நிறுத்தகம் - காயல்பட்டினம் நகராட்சியின் நடவடிக்கையால் அகற்றப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய - நகராட்சிக்குச் சொந்தமான இடம் சைக்கிள் நிறுத்தகமாக அறிவிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் ஏலம் விடப்பட்டிருந்தது. ஏலம் எடுத்தவர், தனது ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த பின்பும் அதைக் காலி செய்யாமலும், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வழி விடாமலும் இருந்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில், நகராட்சிக்கு எதிராக ஒப்பந்தக்காரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் நிறைவில், நகராட்சிக்கு சாதகமாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட நகராட்சி நிர்வாகத்தால் சைக்கிள் நிறுத்தகம் காலி செய்யப்படவில்லை.
இந்நிலையில், நகராட்சியின் நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடை நம்பி ஒப்பந்தக்காரரிடம் நேரில் பேசியதாகவும், அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒப்பந்தக்காரர் சைக்கிள் நிறுத்தகத்தைக் காலி செய்ததாகவும் தெரிகிறது. கட்டிடத்தின் எஞ்சிய சுற்றுச்சுவர் பகுதி, நகராட்சியின் சார்பில் அன்று மாலையில் நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடை நம்பி மேற்பார்வையில் அகற்றப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் மற்றும் பொதுமக்கள் இதன்போது உடனிருந்தனர்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |