காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பாக அரசு சட்டதிட்டங்களை விளக்கும் நோக்குடன், விழிப்புணர்வுக் கூட்டம் இம்மாதம் 10ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி கணிப்பொறி வளாகத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையுரையாற்றினார். ஆழ்துளைக் கிணறு அமைத்தல் தொடர்பான அரசு விதிகள் குறித்து, நகராட்சியின் நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடை நம்பி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இக்கூட்டத்தில், நகரின் கட்டிட ஒப்பந்தக்காரர்கள், கட்டுமானத் தொழில் தொடர்புடையோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு முன்பாக அந்நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாக முன்அனுமதி பெறவேண்டும் எ்னபது உட்பட பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து ஏற்படக்கூடிய உயிரிழப்பினை தவிர்க்கும் பொருட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் உள்ள நில உரிமையாளர்கள் / ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பின்வருமாறு:-
நில உரிமையாளர்களின் கடமைகள்:
1. ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் தோண்டுவதற்கு முன்பாக அந்நிலத்தின் உரிமையாளர் கிராமப்பகுதி எனில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், பேரூராட்சி எனில் நிர்வாக அலுவலரிடமும், நகராட்சி பகுதி எனில் நகராட்சி ஆணையரிடமும், மாநகராட்சி பகுதி எனில் மாநகராட்சி ஆணையரிடமும் 15 நாட்களுக்கு முன்னதாக எழுத்து மூலமாக முன்அனுமதி பெறவேண்டும்.
2. முன்னனுமதி பெற்ற பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பதிவு செய்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் நிறுவனத்தினர் மூலமே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவேண்டும்.
3. ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது, அதனருகில் ஆழ்துளை நிறுவனங்களின் முழுமுகவரி விவரம் மற்றும் நிலஉரிமையாளர் பெயர் முகவரிகளுடன் கூடிய அறிவிப்புப்பலகை வைக்கப்படவேண்டும்.
4. கிணறு தோண்டும்போது அதனை சுற்றி முள்வேலி அல்லது உரிய தடுப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
5. கிணறுகளின் மேற்புரத்தினை இரும்புத் தகடு வைத்து மின் பற்றவைப்பு செய்ய வேண்டும் அல்லது வலிமையான மூடியினை பொருத்தி திருகு மற்றும் மரை கொண்டு முடுக்கப்பட வேண்டும்.
6. மேற்கண்ட நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆழ்துளை கிணறு அமைப்பதாக அறிய நேர்ந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறு அமைந்திருந்தாலோ அந்நில உரிமையாளர்கள் மீதும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவன உரிமையாளர் மீதும் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தினரின் கடமைகள்:
1. ஆழ்துளை கிணறு அமைக்கும் முன்பு, அந்நில உரிமையாளர் உயர் அலுவலரிடம் முன்அனுமதி பெற்றுள்ளாரா என்பதை அறிந்து, அந்நிலத்தில் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.
2. ஆழ்துளை கிணறு அமைத்தபின் தோண்டப்படும் கிணற்றினை சுற்றி 0.50 ஒ 0.50 ஒ 0.60 மீட்டர் அளவில் சிமெண்ட் -கான்கிரிட் நடைமேடை பூமிக்கு மேலாக 0.30 மீட்டர் உயரததில் பூமிக்க கீழாக 0.30 மீட்டர் அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்..
3. உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆழ்துளை கிணறு அமைத்தால், ஆழ்துளை அமைக்கும் வாகனம் மற்றும் கருவிகள் வருவாய்த்துறையினரால் / உள்ளாட்சி துறையினரால் கைப்பற்றப்படும்.
மேற்கண்ட நெறிமுறைகளை பின்பற்றப்படாமல் ஆழ்துளை அமைக்கும் நிறுவனங்கள் குறித்தும் கைவிடப்பட்ட பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச்சுவர் ஏதுமின்றி அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளையும் பொதுமக்கள் கண்டறிந்தால், அதனை பற்றிய விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச அழைப்பு எண் 1077-யை தொடர்.பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |