மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் இன்றைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில், கேரளா பொலிஸ் அணி வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில், எதிரணியினரைத் தாக்கியமைக்காக தூத்துக்குடி அணியின் இரண்டு வீரர்கள் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர்கள் இருவருக்கு இடைவேளையின்போது நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று (மே 14) இரண்டாவது காலிறுதிப்போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும் களம் கண்டன.
துவக்கத்தில் ஈரணி வீரர்களும் சம பலத்துடன் விளையாடினர். நன்கு பயிற்சி பெற்ற - நேர்த்தியான ஆட்டத்திறன் கொண்ட கேரள அணிக்கு, தூத்துக்குடி அணியினர் சளைக்காமல் ஈடுகொடுத்தனர்.
ஆட்டத்தின் முதற்பாதியில் 41ஆவது நிமிடத்தில் கேரள அணி வீரர் பிரோஸ் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் தூத்துக்குடி வீரர் லத்தீஃப் ஒரு கோல் அடித்து சமன்படுத்தினார்.
ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நேரத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை ஈரணியினரிடமும் காணப்படவே, பரபரப்பு தொற்றிக்கொண்டது. தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆடிய கேரள அணி வீரரை விளையாடிக் கொண்டிருந்தபோது தூத்துக்குடி வீரர் டொலாஸ் வேண்டுமென்றே தாக்க, நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து அவரை வெளியேற்றினார்.
இதனால் ஆத்திரமுற்ற தூத்துக்குடி வீரர்கள் தொடர்ந்து வீரர்களைத் தாக்கும் வகையில் விளையாடிக்கொண்டிருந்ததால், பலமுறை பலருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த அணி வீரர் ரபி இரண்டு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால் சிவப்பு அட்டைக்குச் சமமான நிலையைப் பெறவே, அவரும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில், 76ஆவது நிமிடத்தில் கேரள வீரர் ஜிம்சாத் ஒரு கோல் அடிக்கவே, நிறைவில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இம்மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
இன்றைய போட்டியின் இடைவேளையின்போது, இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த அர்லாண்டோ வி.ராயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கும், கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியில் அங்கம் வகிக்கும் - இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயனுக்கும் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம்.இல்யாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
அர்லாண்டோ வி.ராயனுக்கு பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பையும், ஐ.எம்.விஜயனுக்கு அர்லாண்டோ வி.ராயனும் நினைவுப் பரிசை வழங்கினர்.
தொடர்ந்து, நடுவர்கள் மற்றும் ஈரணி வீரர்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இவ்விரு வீரர்களுடனும், தூத்துக்குடி அணியினர் மற்றும் போட்டி நடுவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாளைய முதல் சுற்றுப் போட்டியில் கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதுகின்றன.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து ஏழாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |