மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் இன்றைய போட்டியில், கேரளா பொலிஸ் அணி வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில், கேரள அணிக்காக - இந்திய தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த ஐ.எம்.விஜயனும் விளையாடி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று (மே 13) முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும், மத்யகிரி கால்பந்துக் கழகம் - ஓசூர் அணியும் களம் கண்டன.
இன்றைய ஆட்டத்தில், கேரள அணியின் கை துவக்கம் முதல் இறுதி வரை ஓங்கியிருந்தது. அணியின் ஒவ்வொரு வீரரும் மிகுந்த கவனத்துடனும், கடைசி வரை சோர்வின்றியும், விளையாடியதால், ஆட்டத்தில் நல்ல நேர்த்தி காணப்பட்டது. ஓசூர் அணியினர் சளைக்காமல் ஆடியபோதிலும், கேரளத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதைக் காண முடிந்தது.
கேரள அணி வீரர்களான சரத் லால் 13ஆவது நிமிடத்திலும், 23ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார். அதே அணிக்காக ஜிம் சாத் 56ஆவது நிமிடத்திலும், இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஐ.எம்.விஜயன் 62ஆவது நிமிடத்திலும், ப்ரசாந்த் சைமன் 72ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். எதிரணியினர் கோல் எதுவும் அடிக்காததால், ஆட்டத்தின் நிறைவில் 5-0 என்ற கோல் கணக்கில் கேரளா பொலிஸ் அணி வெற்றிபெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம், இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியுடன் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய தேசிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயன் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் களமிறங்கினார்.
இடைவேளையின்போது அவர் பற்றி ஒலிபெருக்கியில் பின்வருமாறு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது:
1969ஆம் ஆண்டு பிறந்த இனிவலப்பில் மணி விஜயன் என்ற ஐ.எம்.விஜயன், இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் முன்கள ஆட்டக்காரராவார். 1993, 1997, 1999 ஆண்டுகளில், இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அவர் பெற்றுள்ளார். 2003ஆம் ஆண்டில், விளையாட்டு வீரர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இவர் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின்போது, சர்வதேசப் போட்டிகளில் மிக வேகமான கோல் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரராவார்.
இவ்வாறு, ஐ.எம்.விஜயன் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. களமிறங்கிய சில மணித்துளிகளில் தன் பங்கிற்கு அவர் ஒரு கோல் அடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் நிறைவுற்றதும், களத்தில் நடுவர்களாக இருந்தோர், முதலுதவிக் குழுவினர் உட்பட பலரும் அவருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாளை நடைபெறும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், இன்று வெற்றிபெற்ற கேரளா பொலிஸ் அணியும், நேற்றைய (மே 12) போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து ஆறாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |