மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு முடிவுகள் மே 9 அன்று
வெளியாகின. 8 லட்சம் மாணவர்களுக்கும் மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வுகளில் - மாநில அளவில் முதல்
மதிப்பெண்ணை ஊத்தங்கரை - ஸ்ரீ வித்தியா மந்திர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷாந்தி
பெற்றார்.
கிருஷ்ணகிரி நகரை சார்ந்த இவர் - உயிரியல், இயற்பியல், கணிதம் பாடங்களில் 200க்கு 200
மதிப்பெண்களும், வேதியல் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்ணும், தமிழில் 200க்கு 198 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 200க்கு
196 மதிப்பெண்ணும் பெற்று - மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு, 1193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவரின் தந்தை சிவபிரகாஷ் - கிருஷ்ணகிரி அருகே குந்தரப்பள்ளி என்ற ஊரில் உள்ள அரசு
உயர்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவரின் தாயார் தெய்வநாயகி - இல்லத்தரசி.
சுஷாந்தி - மண்டல அளவில், பாட்மிண்டன் விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார். மேலும் -
இவரின் - 8ம் வகுப்பு பயிலும் சகோதரர் மித்திரன், தேதிய அளவில், ஜூனியர் பிரிவில், பாட்மிண்டன் விளையாட்டு போட்டிகளில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
காயல்பட்டினம் பள்ளிக்கூட மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க - சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை (MEET THE STATE TOPPERS) என்ற நிகழ்ச்சி காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை - 2006ம் ஆண்டு முதல், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பு, இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.
9வது ஆண்டு நிகழ்ச்சிகள் ஜூன் மாதம் காயல்பட்டினத்தில் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் - மாநில முதல் மாணவி எஸ். சுஷாந்தி கலந்துக்கொள்கிறார்.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியில் - மாநிலத்தின் முதல் மாணவர் மற்றும் உள்ளூர் பள்ளிகளில் இருந்து எதிர்வரும் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறும்.
மேலும் உள்ளூர் பள்ளிக்கூடங்களில் பயின்று பன்னிரண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தனது பெரியம்மா மகன் ரேஸ்வர், தந்தை சிவ பிரகாஷ், தாயார் தெய்வநாயகியுடன் மாநிலத்தின் முதல் மாணவி சுஷாந்தி...
தனது பெரியம்மா மகன் ரேஸ்வர், தந்தை சிவ பிரகாஷ், பெரியம்மா சசிகலா, தாயார் தெய்வநாயகி, பாட்டி முனியம்மாள் ஆகியோருடன் மாநிலத்தின் முதல் மாணவி சுஷாந்தி...
|