தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி கே.மலைச்சாமி, அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே.மலைச்சாமி (ஓய்வுபெற்ற ஐஏஸ்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறத் தவறும் நிலையில், அது வெளியில் இருந்து கட்சிகளின் ஆதரவை நாடினால், அதற்கு ஆதரவு தருவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார்" என்று பேட்டியளித்திருந்தார்.
மேலும், மோடி பிரதமர் ஆவதற்கு முதல்வர் ஜெயலலிதா அதரவு அளிப்பார் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பேட்டியின் எதிரொலியாகவே, அதிமுகவில் இருந்து மலைச்சாமியை அதிரடியாக நீக்கியிருக்கிறார், அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா.
தகவல்:
தி இந்து |