கத்தர் காயல் நல மன்றத்தின் 20ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனை முகாம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கண்கவர் பரிசுகள் வழங்கலுடன் களைகட்ட நடந்தேறியுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 20ஆவது பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் கத்தர் மிசயீத் பூங்காவில் 24.04.2014 வெள்ளிக்கிழமையன்று 08.00 மணி முதல் 21.00 மணி வரை நனிசிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
புறப்பாடு:
மன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் தத்தம் வாகனங்களில் குறித்த நேரத்தில் நிகழ்விடம் வந்தடைந்தனர். வாகன வசதி இல்லாதோருக்காக தனியாக செய்யப்பட்டிருந்த வாகனங்களில் அவர்களும் வந்து சேர்ந்தனர்.
மருத்துவ பரிசோதனை முகாம்:
துவக்கமாக, வருகை புரிந்த அனைவரும் தம் பெயரை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து நிலுவையில் உள்ள சந்தா தொகைகளையும் செலுத்தினர்.
பின்னர், மன்ற தலைவர் எஸ்.ஏ. ஃபாஸுல் கரீம் மருத்துவ பரிசோதனை இலவச முகாமைத் துவக்கி வைத்தார். இரத்த அழுத்தம், நீரழிவு, உயரம்/எடை - BMI முறைப்படி பரிசோதனை செய்யப்பட்டது.
அனைவருக்கும் காலை உணவாக சூடான இட்லி, சாம்பார், பொங்கல் பரிமாறப்பட்டது. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தபோதிலும், நீண்ட நாட்களுக்குப் பின்னர் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர பார்த்த மகிழ்ச்சியில் வந்திருந்தோர் ஒருவருக்கொருவர் முகமன் கூறி, தாயக செய்திகள் குறித்து நண்பர்களுக்கே உரித்தான உற்சாகத்துடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தனர். மகளிர் தனியாக அவர்களது இயல்பான அரட்டையில் ஆழ்ந்தனர்.
விளையாட்டுப் போட்டிகள்:
எலுமிச்சை கரண்டி ஓட்டம், தண்ணீர் நிறைத்தல், கல் எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் சிறாருக்காக நடத்தப்பட்டது. குழந்தைகள், சிறுவர் - சிறுமியர் இப்போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பெரியோருக்காக Ball Passing போட்டி நடத்தப்பட்டது. நிறைவில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியதும், அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று அனைவரும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
மதிய உணவு:
தொழுகைக்குப் பின்னர், பசி மயக்கத்திலிருந்த அனைவருக்கும் கமகமக்கும் தேங்காய்ச் சோறு, கோழிக் கறி, அவித்த முட்டை மற்றும் சேமியா பாயசம் பரிமாறப்பட்டது. வந்திருந்தோர் அனைவரும் வயிறார உண்டு, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த குழுவினரை உளமாரப் பாராட்டினர். உணவு ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, முஹம்மத் லெப்பை ஆகியோரிணைந்து சிறப்புற செய்திருந்தனர். மதிய உணவுண்ட பின் அனைவரும் சிறிது நேரம் இளைப்பாறினர்.
பொதுக்குழுக் கூட்டம்:
முறைப்படி துவங்கிய மன்றத்தின் 20ஆவது பொதுக்குழுக் கூட்டத்தின் துவக்கமாக, மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் அனைவரையும் வரவேற்று, மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் கூட்டத்திற்குத் தலைமையேற்கவும், மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டி.கபீர் முன்னிலை வகிக்கவும் கேட்டுக்கொள்ள, அவர்கள் தம் பொறுப்புகளை ஏற்றனர். ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
சிறப்புரை:
தொடர்ச்சியாக, மன்ற செய்தி தொடர்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ‘கவிமகன்’ காதர் சிறப்புரையாற்றினார். மன்றத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து அழகிய முறையில் விவரித்துக் கூறினார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த எண்ணிக்கையிலான காயலர்களை மட்டுமே கொண்டு துவக்கப்பட்ட இம்மன்றம், இன்று ஏராளமான உறுப்பினர்களைக் கொண்டு - அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் தாயகமாம் காயல்பட்டினத்து மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவிச் சேவைகளை செவ்வனே செய்து சிறப்புற செயல்பட்டு வருவதாகவும், இச்சேவைகள் தொடர இன்னும் அதிக வீரியத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
மன்றத்தில் புதிதாக உறுப்பினரானோர், இக்கூட்டத்தில் தம்மை அனைவருக்கும் அறிமுகம் செய்துகொண்டனர்.
தலைமையுரை:
மன்றத் தலைவரும், கூட்டத் தலைவருமான எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
நம் மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவரைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கத்தர் நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்று வருவோர் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
நம் நகருக்கு பொதுநல செயல்பாடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், சமூகக் கட்டமைப்பு உட்பட அனைத்து அம்சங்களிலும், உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்புடன் நம் மன்றம் இறையருளால் இயன்றளவு சிறப்புற செயலாற்றி வருகிறது. இது இன்னும் வீரியத்துடனும், விரிவாகவும் செய்யப்பட - இளைய தலைமுறையினர் மன்றத்தின் செயற்குழுவில் இணைந்து, பொறுப்புகளை ஏற்று செயலாற்ற முன்வர வேண்டும். அது நிறைவாக அமையும்பட்சத்தில், சேவைகள் இன்னும் முனைப்புடன் செயல்வடிவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இம்மன்றத்தில் அனைவரின் சார்பாக சிலர் பொறுப்புகளில் உள்ளனர் எனினும், அனைவருக்கும் சம உரிமை உள்ளது. மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கூற விரும்புவோர் - தலைவராகிய எனக்கோ அல்லது நிர்வாகக் குழுவிற்கோ நேரடியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ உங்கள் விமர்சனங்களையும், குறை - குற்றச்சா்டடுகளையும் தெரிவிக்க உரிமையுள்ளது. அவற்றை முறைப்படி பரிசீலித்து விளக்கமளிக்க மன்ற நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது என்பதை இந்நேரத்தில் அன்புடன் அறியத் தருகிறேன்.
இவ்வாறு, மன்றத் தலைவர் பேசினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
மதுரை ஒத்தகடையை சேர்ந்த பொறியாளர் ஜனாப் ராஜா ஹுஸைன் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறை, சமூக ஒற்றுமை உள்ளிட்டவை குறித்து என்னுடன் பணிபுரியும் இம்மன்றத்தின் உறுப்பினர் எம்.என்.சுலைமான் மூலம் கேட்டறிந்துள்ளேன். இன்று அதை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
வார விடுமுறையைக் கொண்டாட வேண்டிய இத்தருணத்திலும், நகர்நலனில் அக்கறை கொண்டு அனைவரும் ஒன்றுகூடியிருப்பது காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் போன்றோருக்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். இம்மன்றத்தில் நானும் இணைந்து செயல்பட ஆர்வமாய் உள்ளேன். கருணையுள்ள அல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையால் இம்மன்றம் தன் இலக்கை நோக்கி தடையின்றிப் பயணித்து, நற்பணிகளை நிறைவாகச் செய்திடவும், அவற்றின் பலன்கள் ஈருலகிலும் அனைவருக்கும் கிடைத்திடவும் நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு சிறப்பு விருந்தினர் பேசினார்.
மகளிருக்கான போட்டிகள்:
மகளிருக்கான சன்மார்க்கப் போட்டிகள், மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்சா மாமா, மவ்லவீ ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ ஆகியோரின் ஒருங்கிணைப்பில் தனிப்பகுதியில் நடைபெற்றது.
கூட்ட நிறைவு:
மன்ற உறுப்பினர் கத்தீபு நன்றியுரையாற்றினார். மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார் என்ற நபிமொழியுடன் துவங்கிய அவர், இந்த விடுமுறை நாளில் தம் சொந்த அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார். ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாலை அமர்வு:
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், மாலை அமர்வு - அஸ்ர் ஜமாஅத் தொழுகையைத் தொடர்ந்து மகிழ்ச்சிகரமாகத் துவங்கியது. துவக்கமாக அனைவருக்கும் காயல்பட்டினம் இஞ்சி தேனீரும், நொறுக்குத் தீனியாக சூடான சம்சாவும் பரிமாறப்பட்டது.
கயிறிழுக்கும் போட்டி:
துவக்கமாக உறுப்பினர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. ‘ராயல் கத்தார்”, ‘காயல் கிங்க்ஸ்’ என உறுப்பினர்கள் ஈரணிகளாகப் பிரிக்கப்பட, போட்டி துவங்கியது. தேனீர் அருந்திய உற்சாகத்தில் - வெற்றிக்காக ஈரணியினரும் முழு பலத்தைப் பயன்படுத்தி முயற்சித்தனர்.
இவர்களது அளப்பறையைக் கண்டு - பூங்காவில் பொழுதுபோக்க வந்திருந்த மற்றவர்களும் கயிறிழுக்கும் போட்டிக்கு இலவச பார்வையாளர்களாயினர். நிறைவில் ‘ராயல் கத்தார்’ அணி வெற்றிபெற்றது.
மழலையருக்கான போட்டிகள்:
இக்குடும்ப சங்கம நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மழலையர் போட்டிகள் அனைத்தையும், மன்ற உறுப்பினர்களான ஹல்லாஜ், ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன், மவ்லவீ முஹம்மத் ஸாலிஹ் உமரீ ஆகியோரிணைந்து - மழலையர் மகிழ்வுறும் வகையில் அழகாக நடத்தி முடித்திருந்தனர். அப்போட்டிகளில் வென்ற மழலையருக்கு துவக்கமாக பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.
மகளிருக்கான சன்மார்க்கப் போட்டிகள்:
மகளிர் போட்டிகளில் வென்ற மகளிரின் சார்பாக அவர்களது கணவர்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஆடவருக்கான பொது அறிவு வினாடி-வினா போட்டி:
மஃரிப் ஜமாஅத் தொழுகைக்குப் பின் ஆடவருக்கான பொது அறிவு வினாடி-வினா போட்டி துவங்கியது. இதில் பங்கேற்ற 36 உறுப்பினர்களும், அணிக்கு 6 பேர் என மொத்தம் 6 அணியினராகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் துவங்கியது. ‘கவிமகன்’ காதர், கத்தீப் ஆகியோர் இப்போட்டியை ஒருங்கிணைத்து, நடுவர்களாகப் பணியாற்றினர்.
பொது அறிவு, மார்க்கம், அரசியல் உள்ளிட்ட துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து பங்கேற்பாளர்களும் ஆர்வத்துடன் விடையளித்தபோதிலும், அதிகளவில் சரியான விடையளித்த முஹ்யித்தீன் தம்பி அணி முதலிடத்தையும், எம்.என்.சுலைமான் அணி இரண்டாமிடத்தையும் பெற்று, பரிசுகளைத் தட்டிச் சென்றது.
இப்போட்டியில், ‘கவிமகன்’ காதர் நகைச்சுவையுடன் கேள்விகளைக் கேட்டது அனைவரையும் மிகவும் ரசிக்கச் செய்தது.
பரிசளிப்பு:
அனைத்துப் போட்டிகளிலும் வென்ற ஆடவருக்கு, க்ளிக் ஆன் நிறுவனத்தின் அனுசரணையில் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன.
குழுப்படம்:
நிகழ்வுகளின் நிறைவாக அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், ஹாஃபிழ் முஹம்மத் லெப்பை, ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ், ஹல்லாஜ், அஸ்லம், முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட அங்கத்தினர் சிறப்புற செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நீங்கா நினைவுகளுடன் மன்ற உறுப்பினர்கள் பிரியாவிடைபெற்றுச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
(கத்தரிலிருந்து) ஃபைஸல் ரஹ்மான்
தகவல்:
(கத்தரிலிருந்து) M.N.சுலைமான் மூலமாக,
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |