மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் - இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று மூன்றாவது காலிறுதிப் போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், நேற்று வெற்றி பெற்ற கேரள மாநிலம் - கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், மே 16ஆம் நாளன்று விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.
வெளியூர் அணி என்பதால், கொச்சி அணி மீது எதிர்பார்ப்பும், உள்ளூர் அணி என்பதால் காயல்பட்டினம் அணி வெற்றி பெறுவது குதிரைக்கொம்பு என்றும் ரசிகர்களில் பெரும்பாலோர் எண்ணிக்கொண்டிருக்க, ஆட்டம் முழுவதும் காயல்பட்டினம் அணியின் கோல் காப்பாளர் உறங்கி ஓய்வெடுக்கலாம் எனும் அளவுக்கு பந்து அவர்களது ஆதிக்கத்திலேயே இருந்தது.
ஆட்டம் துவங்கி 08ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் கிதுர் ஃபைஸல், 17ஆவது நிமிடத்தில் தீன், 22ஆவது நிமிடத்தில் அஃப்ரஸ் ஆகியோர் தமதணிக்காக தலா ஒரு கோல் அடித்து, முதல் பாதியிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
காயல்பட்டினம் அணியினருக்கு இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கொச்சி அணியினரின் தடுப்பாட்டத்தால் அது தவிர்க்கப்பட்டது. நிறைவில், 3-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, இம்மாதம் 23ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர். உள்ளூர் அணி விளையாடியதால் அவர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. காயல்பட்டினம் அணியினர் கீழே விழும்போதெல்லாம் மஞ்சள் அட்டை காண்பிக்கக் கோரிய ரசிகர்களிடம், பொறுமையே உருவான போட்டி நடுவர்கள் வாங்கிக் கட்டிக்கொண்டனர்.
இன்றைய போட்டியில், காயல்பட்டினம் பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது சுற்றுப்போட்டிக் குழுவினர் அவருக்கு சால்வை அணிவித்து, ஈரணி வீரர்களையும், நடுவர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
நாளை (மே 19) முதல் சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. அதில் கோயமுத்தூர் மாவட்ட கால்பந்துக் கழக அணியும், கன்னியாகுமரி மறவை யூத் க்ளப் அணியும் களம் காண்கின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 11ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |