குவைத் காயல் நல மன்றம் சார்பில், கடந்த ஏப்ரல் மாதத்திலும், நடப்பு மே மாதத்திலும் காயலர்கள் பங்கேற்பில் இரண்டு முறை சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பொதுவாக ஏப்ரல் மற்றும் மே என்றாலே பள்ளிக்கூட ஆண்டு விடுமுறைதான் நினைவுக்கு வரும். வெளிநாடுகளில் வாழும் நம் காயலர்கள் இந்த விடுமுறையில்தான் தம் குடும்பங்களை விசிட் விசாவில் தாம் வேலை பார்க்கும் நாடுகளுக்கு அழைத்து குடும்பத்தோடு இந்த விடுமுறையை சந்தோஷமாகக் கழிப்பது வழக்கம்.
ஆனால் குடும்பத்தோடு வளைகுடா நாடுகளில் வசிக்கும் நம் காயலர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டு விடுமுறை என்பது சில நாட்களே விடுவார்கள். பெரிய விடுமுறை என்பது வகுப்பு மாறி காலாண்டு பரீட்சை முடிந்த பிறகு - புனித ரமழானோடுதான் சேர்த்து விடுவார்கள்.
பெரும்பாலும் இந்த ஆண்டு விடுமுறையில் காயலர்கள் காயல்பட்டினம் வந்து தம் சொந்த பந்தங்களோடு விடுமுறையை கழிப்பார்கள்.
ஒரு சிலர் தம் வேலை காரணமாக தம் குடும்பத்தை மட்டும் இந்த விடுமுறையில் காயல்பட்டினம் அனுப்பி வைப்பார்கள். இன்னும் சிலர் விடுமுறையை வெளிநாடுகளிலேயே கழிப்பார்கள்.
விசிட் விசாவில் வெளிநாடு செல்லும் குடும்பங்களும், வெளிநாட்டிலேயே இருக்கும் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து விடுமுறையை கழிப்பது என்பது தற்போது வளைகுடா நாடுகளில் கிடைத்து இருக்கும் பள்ளி ஆண்டு முடிவில் விடப்படும் இந்த குறுகிய விடுமுறை நாட்களில்தான்.
குவைத்திலும் இந்த விடுமுறை விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து சில குடும்பங்களும் ஆண்டு விடுமுறையை சந்தோஷமாகக் கழிப்பதற்காக குவைத் வந்து இருக்கிறார்கள்.
இந்த ஒன்றுகூடலின் பலனாக அனைவரும் சேர, ஓர் இன்பச் சுற்றுலா வடிவமைத்து அரங்கேற்றப்பட்டது.
சுற்றுலா 1 - வாஃப்ரா:
குவைத்தில் "வாஃப்ரா" (Waafra குவைத் - சஊதி எல்லை பகுதி) எனும் இடம் உள்ளது. இது கிட்ட தட்ட குவைத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
குவைத்தில் உள்ள பெரும்பாலான குவைதிகளுக்கு இந்த வாஃப்ரா பகுதியில் சொந்தமான போரம் என்னும் தோட்டம் உள்ளது, நம் காயலர்களுக்கு திருச்செந்தூர் பகுதிகளில் தோட்டம் உள்ளது போல். இந்த தோட்டத்தில் இவர்கள் பல வகையான காய்கறிகள், பழங்கள், பூக்களைப் பயிரிடுகிறார்கள். இங்கு ஆடு, மாடு, ஒட்டகம், கோழிப் பண்ணைகளும் வைத்து உள்ளார்கள்.
நீச்சல் குள வசதியோடு உள்ள இந்தத் தோட்டத்தை சிலர் வியாபார நோக்கில் வைத்துள்ளார்கள். சிலர் விடுமுறை நாட்களை இங்கு வந்து சந்தோஷமாகக் கழிப்பதற்காக வைத்துள்ளார்கள்.
பொதுவாக குளிர் காலங்களில் இவர்கள் இங்கு வந்து டென்ட் அடித்து அதில் வசிகிறார்கள். ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவற்றை சுட்டு சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
இந்த அருமையான தோட்டத்திற்கு சென்று மகிழ நம் காயலர்களுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது, அதையே அவர்கள் இன்ப சுற்றுலாவாக சென்று மகிழ்ந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை மாலையில் இந்த சுற்றுலா ஆரம்பமானது. 19.00 மணியளவில் அனைவரும் வாஃப்ராவை (Waafra குவைத் - சஊதி எல்லைப் பகுதி) அடைந்தார்கள். அந்த நேரம் முதல் நம் காயலர்களின் மகிழ்ச்சி ஆரம்பமானது. வந்து இறங்கியவுடன் மிக்சர், முறுக்கு, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களுடன் தேனீர் விநியோகம் நடந்தது.
ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த விசயங்களைப் பரிமாறி கொள்வதிலும், இடைவிடாத பேச்சிலும் நீண்ட நேரத்தைக் கழித்தனர். பின்னர், மசாலாவில் ஊற வைக்கப்பட்டிருந்த கோழிக் கறியை சுடும் படலம் ஆரம்பமானது.
சுட்ட கறி, சப்பாத்தி, பலவகை கறிகளுடன் இரவுணவு இனிதே முடிந்தது. அதனைத் தொடர்ந்து இடைவிடாத பேச்சு மற்றும் இன்பக் களிப்புடன் நீண்ட நேரத்தைப் போக்கிய பின், வேறு வழியில்லாமல் அனைவரும் உறங்கச் சென்றனர்.
நீண்ட நேரம் கழித்து உறங்கச் சென்றாலும் அனைவரும் இறையை வணங்க சுபுஹு தொழுகைக்கு குறித்த நேரத்தில் எழுந்து வந்தனர். தொழுகை முடிந்து தொடர்ந்து மிக்சர், முறுக்கு, பிஸ்கட் போன்ற தின் பண்டங்களுடன் தேனீர் விநியோகம் நடைபட்டது.
அதனைத் தொடர்ந்து அனைவரும் அதிகாலையில் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். சிலர் கிரிக்கெட், சிலர் பாட்மிட்டன் என்று விளையாட, அமைதியான அதிகாலை நேரத்தில் அந்தப் பகுதியே களைகட்டியது.
காலை உணவாக கறி சேமியா பரிமாறப்பட்டது. தொடர்ந்து அனைவரும் ஜும்ஆ தொழுகைக்காக அருகிலிருந்த பள்ளிக்குச் சென்றனர். தொழுதுவிட்டு வந்தவுடன் காயல்பட்டினத்தின் பாரம்பரிய உணவாகிய களரி கரி, கத்தரிக்காய், புளியானத்தோடு உணவு வழங்கப்பட்டது.
மாலையில் அனைவரும் பக்கத்தில் உள்ள காய்கறித் தோட்டம், பூக்கள் தோட்டம், ஆடு, மாடு, ஒட்டகப் பண்ணை ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்து மகிழ்தனர்.
தேநீர் உபசரிபுடன் சுற்றுலா முடிவுற்றது. பின்பு அனைவரும் குவைத் சிட்டியை நோக்கி புறப்பட்டனர்.
சுற்றுலா 2 - ஃகிரான் ரிசார்ட் (செயற்கைக் கடல் பகுதி):
இரண்டாவது சுற்றுலாவாக, குவைத் நாட்டின் சஊதி எல்லையில் அமைக்கப்பட்டுள்ள - கண்ணைக் கவரும் அழகிய சுற்றுலா தளமான Khiran Resortsக்கு, இம்மாதம் 08ஆம் நாள் வியாழக்கிழமை 16.30 மணிக்குத் துவங்கி, மறுநாள் வெள்ளிக்கிழமை 22.00 மணி வரை அனைவரும் சென்று வந்தனர்.
ஓய்வெடுப்பதற்காக பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இச்சுற்றுலா தளத்தில், போட்டிங், கடல் குளியல், பாட்மிண்டன் விளையாட்டு, சூட்டுக்கறி (பார்பிக்யூ) என, தம் குடும்பம் - குழந்தைகளுடன் ஆசை தீர அனுபவித்தனர் - குவைத் வாழ் காயலர்கள்.
காயலர் அல்லாத சிலரும் இச்சுற்றுலாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். சுற்றுலாவின்போது ஐவேளைத் தொழுகையும், ஹாஃபிழ் முஹம்மத் அவர்களால் கூட்டாக (ஜமாஅத்தாக) நடத்தப்பட்டது.
இவ்விரண்டு சுற்றுலாக்களும், குவைத் வாழ் காயலர்களிடையே நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மீண்டும் இதுபோன்ற ஒரு தருணத்தை எதிர்பார்த்து ஏங்கியிருக்கச் செய்துள்ளது.
சுற்றுலா ஏற்பாடுகள் அனைத்தையும், குவைத் காயல் நல மன்ற நிர்வாகிகளான ஹஸன் மவ்லானா, அபூதாஹிர், எஸ்.எம்.டி.மொகுதூம், கே.எஸ்.அமானுல்லாஹ் உள்ளிட்ட மன்ற அங்கத்தினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
குவைத்திலிருந்து...
L.T.அஹ்மத் முஹ்யித்தீன்
குவைத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |