இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் - மாணவரணி, இளைஞரணி கலைக்கப்பட்டு, இளைஞரணிக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 20.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது. நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார்.
மூத்த நிர்வாகி ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதான - கட்சியின் வரவு-செலவு கணக்கறிக்கையை கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
மூத்த நிர்வாகி எஸ்.டி.கமால், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான எம்.எச்.அப்துல் வாஹித், ரஹ்மத்துல்லாஹ், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் - அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது கட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிறை-குறைகள் குறித்து கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
கட்சிக்கென சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும், அவற்றுக்கு மாற்றமாக யாரும் செயல்படக் கூடாது என்றும், அவ்வாறு செயல்படுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தமதுரையில் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - காயல்பட்டினம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியின் தலைவர் தஸ்தகீர் ஹாஜி, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி என்.கே.இப்றாஹீம் ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னவர்களின் மக்ஃபிரத்திற்காக துஆ செய்கிறது.
தீர்மானம் 2 - தேர்தல் வரவு-செலவு கணக்கறிக்கை:
நகரப் பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் கூட்டத்தில் சமர்ப்பித்த - நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதான கட்சியின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டம் ஒருமனதாக அங்கீகரிக்கிறது.
தீர்மானம் 3 – வாக்களித்தோருக்கு நன்றி:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேண்டுகோளை ஏற்று, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தமது பெருவாரியான வாக்குகளைப் பதிவு செய்த காயல்பட்டினம் நகர பொதுமக்கள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4 - ஒழுங்கு நடவடிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலின்போது, கூட்டணி தர்மத்தை மீறி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - இளைஞரணி, மாணவரணி கலைப்பு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மற்றும் மாணவரணியின் காயல்பட்டினம் கிளை அமைப்புகளை முற்றிலுமாகக் கலைத்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - புதிய நிர்வாகிகள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளராக எம்.இசட்.சித்தீக், எலக்ட்ரீஷியன் பஷீர் ஆகியோரையும், தொண்டரணி நகர அமைப்பாளராக இப்றாஹீம் அத்ஹம் அவர்களையும், இளைஞரணி அமைப்பாளராக ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அவர்களையும், அதன் துணை அமைப்பாளராக ஜிஃப்ரீ அவர்களையும் இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
நகர மாணவரணிக்கு புதிய நிர்வாகிகளை நடப்பு மே மாத இறுதிக்குள் தேர்ந்தெடுக்க - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளுக்கு இக்கூட்டம் ஒருமனதாக அதிகாரமளிக்கிறது.
தீர்மானம் 7 - தொடர்வண்டித் துறைக்கு நினைவூட்டல் கடிதம்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நிலுவைப் பணிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014-15 நிதியாண்டில், ரயில்வே நிதிநிலையறிக்கை மூலம் கூடுதல் தொகை பெற்று, அதனடிப்படையில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் நகரின் அனைத்துக்கட்சியினர் சார்பில் வெளியிடப்பட்ட ரயில் மறியல் போராட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக தென்னக ரெயில்வே மதுரை மண்டல துணை மேலாளர் வி.அஜீத் குமார் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைந்து, ரயில்வே பட்ஜெட்டும் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக இதுகுறித்து தென்னக ரெயில்வே மதுரை மண்டலத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.இசட்.சித்தீக் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் முந்தைய கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |