மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் - இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில், கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று இரண்டாவது சுற்றுப்போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், கேரள மாநிலம் - கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், மஹாராஷ்ட்டிர மாநிலம் புனே ஷரத் சாக்கர்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ஈரணிகளும் சம பலத்துடன் விளையாடின. ஒரு கட்டத்தில் கொச்சி அணியின் ஆட்டத்தில் நேர்த்தி கூடியது.
அதற்கு நேர் மாற்றமாக புனே அணி மந்தமடையத் துவங்கியது. ஆட்ட நேரம் நிறைவடையும் வரை - ஆதரவாளர்களின் கூக்குரல்களையும் தாண்டி புனே அணி தொடர்ந்து ‘தலைகீழ் சுறுசுறுப்பு’டன் விளையாடவே, 0-1 என்ற கோல் கணக்கில் அது தோல்வியுற்றது. ஆட்டத்தின் முதற்பாதியில் 32ஆவது நிமிடத்தில், கொச்சி அணியின் சுபீஷ் என்ற வீரர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அழகாக கோலாக்கினார்.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் கண்டு களித்தனர்.
நாளை (மே 18) மூன்றாவது காலிறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் இன்று வெற்றிபெற்ற கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணியும், நேற்று வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதுகின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 10ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |