மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் - இன்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில், கோவை மாவட்ட கால்பந்துக் கழக அணி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்று முதல் சுற்றுப்போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், கன்னியாகுமரி மறவை யூத் க்ளப் அணியும், கோவை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை மந்தமாகவே இருந்ததால், ரசிகர்களும் அரட்டையில் மூழ்கினர். எனினும், அவ்வப்போது ஈரணி வீரர்களும் வித்தைகள் காட்டவும் தவறவில்லை. கோவை அணியின் வசந்த முகிலன் 24ஆவது நிமிடத்திலும், சதீஷ் 33ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்கவே, முதற்பாதியில் அவ்வணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கன்னியாகுமரி அணி ஓரளவுக்கு முயற்சித்து ஆடியது. அந்த அணியின் ஜெனட் ரோஸ் 46ஆவது நிமிடத்திலும், மஜூ 65ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்க, ஆட்ட நிறைவில் ஈரணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
சமனுடைப்பு முறையில் கோவை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணிக்காக சதீஷ், கார்த்திகேயன், ப்ரவீன் ஆகியோர் தலா ஒரு கோலும், கன்னியாகுமரி அணிக்காக மணி, பேபி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இன்றைய போட்டியில், காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புகாரீ ஹாஜி அறக்கட்டளை நிறுவனர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது சுற்றுப்போட்டிக் குழுவினர் அவருக்கு சால்வை அணிவித்து, ஈரணி வீரர்களையும், நடுவர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர்.
நாளை (மே 20) நடைபெறும் இரண்டாவது சுற்றுப்போட்டியில், இன்று வெற்றிபெற்ற கோவை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் - திருவனந்தபுரம் அணியும் மோதுகின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 12ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |