பாராளுமன்ற தேர்தல்கள் முடிவு வெளியானதை அடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிக்கண்டது. அது தோல்வி கண்ட 2 தொகுதிகளை சார்ந்த அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்த கே.பி. முனுசாமியிடம் இருந்து பல துறைகள் பறிக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறை பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டு முதலில் அறிவிப்பு வெளியாகியது. தற்போது அந்த பொறுப்பும் பறிக்கப்பட்டு, அத்துறை ஊரக தொழில்கள் துறை அமைச்சர் ப.மோகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையின் புதிய அமைச்சராக தொண்டமதூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே.பி.முனுசாமியிடம் இருந்து தொழிலாளர் நலத்துறை பறிக்கப்படுவதற்கு முன்னர், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா பரிந்துரையின்பேரில், தமிழக அமைச்சரவையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்கவுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், தமிழக அமைச்சரவையில் திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, திரு. S.P. வேலுமணி, திருமதி. எஸ். கோகுல இந்திரா ஆகிய 3 பேரும், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திரு. எஸ். தாமோதரன், திரு. K.T. பச்சைமால், திரு. B.V. ரமணா ஆகிய 3 பேரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திரு. எஸ். தாமோதரன் இதுவரை வகித்துவந்த, வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு, தோட்டக்கலை மற்றும் கரும்பு மேம்பாடு ஆகிய இலாகாக்கள் புதிய அமைச்சர் திரு. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர், வேளாண்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
அமைச்சர் திரு. K.P. முனுசாமி இதுவரை வகித்துவந்த, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், நகர மற்றும் ஊரக குடிநீர் விநியோகம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் தடுப்பு ஆகிய இலாகாக்கள், புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு. S.P. வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
திரு. K.T. பச்சைமால் இதுவரை வகித்துவந்த, தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, செய்தித்தாள் காகிதம் கட்டுப்பாடு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகிய இலாகாக்கள் அமைச்சர் திரு. K.P. முனுசாமியிடம் வழங்கப்பட்டுள்ளன. அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
திரு. B.V. ரமணா, இதுவரை வகித்துவந்த, வருவாய், மாவட்ட வருவாய் அமைப்பு, துணை ஆட்சியர்கள், சீட்டு மற்றும் கம்பெனி பதிவுத்துறை ஆகிய இலாகாக்கள் அமைச்சர் திரு. R.B. உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் வருவாய்த்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ், இதுவரை வகித்துவந்த, கைத்தறி மற்றும் துணிநூல்துறை, புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. S. கோகுல இந்திராவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
அமைச்சர் திரு. R.B. உதயகுமார், இதுவரை வகித்துவந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இனி அவர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.
புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, திரு. S.P. வேலுமணி, திருமதி. எஸ். கோகுல இந்திரா ஆகிய 3 பேரும், இன்று மாலை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பார்கள் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. |