மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் - இன்று நடைபெற்ற போட்டியில், திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. அவ்வணி 10ஆவது கோலை அடித்தபோது, ஸ்கோர் போர்டில் அதைப் பதிய வழியின்றி சுற்றுப்போட்டிக்குழுவினர் திணறினர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்றைய போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், திருச்சி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணியும் மோதின.
துவக்கத்தில் ஈரணியினரின் ஆட்டங்களும் ரசிக்கத்தக்க அளவில் நேர்த்தியாக இருந்தது. இவ்வாறிருக்க, திருவனந்தபுரம் அணியினர் சற்று விவேகத்துடன் விளையாடி, முதல் பாதியிலேயே 5 கோல்களை அடித்துவிட்டனர். திருச்சி அணியினர் சளைக்காமல் ஆடியபோதிலும் அவ்வணியின் கோல் காப்பாளர் “ரொம்ப நல்லவேன்”னு சொல்லுமளவிற்கு எதிரணியின் மீது கூடுதலாக இரக்கப்பட்டுவிட்டது போல, வரும் பந்துகளையெல்லாம் வரவேற்று வழிவிட்டதால், ஒரு கட்டத்தில் அவ்வணியினர் சோர்வுற்றுவிட்டனர்.
திருவனந்தபுரம் அணியினர் முன்னோக்கிச் சென்று திரும்பியபோதெல்லாம் ஒரு கோலுடன் திரும்பினர். மறுமுனையில் மிகவும் முயற்சி செய்து திருச்சி அணியினர் 2 கோல்களை அடிக்க, நிறைவில் 10-2 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணி வெற்றிபெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணிக்காக, ரஞ்சித், அனீஸ் ஆகியோர் தலா 3 கோல்களும், டேனியல் 2 கோல்களும், சைமார்ட்டின், ப்ரஜேஷ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். திருச்சி அணிக்காக பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்திருந்தனர்.
சுற்றுப்போட்டிக் குழுவினர் திணறல்!
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தின் கோல் ஸ்கோர் போர்ட் பலகை 1 முதல் 9 வரை ஒற்றை இலக்க எண்களை மட்டும் காட்சிப்படுத்தத் தக்கதாக, கைகளால் மாற்றும் வகையில் டிஜிட்டல் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில், திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணி தனது 9ஆவது கோலை அடித்தனர்.
அடுத்த கோல் விழுந்தால் “10” என்று எப்படிப் பதிவு செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தபோது 10ஆவது கோலும் அடிக்கப்பட்டுவிட்டது. இதனால் சுற்றுப்போட்டிக் குழுவினர் சிறிது திணறினர். அடுத்த சில நிமிடங்களில் மாற்று யோசனைப் படி 10ஆவது கோலையும் ஸ்கோர் போர்டில் பதிவு செய்ய, அடுத்த ஓரிரு நிமிடங்களில் ஆட்டம் நிறைவுற்றது.
இச்சுற்றுப்போட்டியிலேயே இன்றுதான் - இதுவரையிலான போட்டிகளில் அதிகபட்ச கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர்.
நாளை நடைபெறும் 4ஆவது காலிறுதிப் போட்டியில் இன்று வெற்றி பெற்ற திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணியும், நேற்று (மே 20 அன்று) விளையாடி வெற்றிபெற்ற திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியுடன் மோதவுள்ளது.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 14ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |