வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் நடத்தப்பட்ட காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டியில், KTN அணி கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டி:
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டி இம்மாதம் 02ஆம் நாளன்று துவங்கி, 14ஆம் நாள் வரை நடைபெற்று முடிந்துள்ளது.
இறுதிப்போட்டியில் KTN வெற்றி:
8 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியில், KTN அணியும், Fi-Sky Boys அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய KTN அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Fi-Sky Boys அணி, 10 ஓவர்களில் 71 ஓட்டங்களை மட்டும் பெற்றதால் 7 ஓட்டங்கள் வேறுபாட்டில் KTN அணி வெற்றிபெற்றது.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவரும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளர் எஸ்.எம்.உஸைர், தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் கழக துணைச் செயலாளர் ரொனால்டோ, வி-யுனைட்டெட் குழும நிறுவனர்களுள் ஒருவரான யு.ஷேக்னா, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் அங்கத்தினரான எம்.பி.எஸ்.சுலைமான், வாவு ஷாஹுல் ஹமீத், ஃபஸ்லுல் ஹக், சொளுக்கு, ஹாங்காங் தைக்கா உபைதுல்லாஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் அப்துஸ்ஸமத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் கழக செயலாளர் சிவகுமரன் வாழ்த்துரையாற்றினார்.
சிறப்புப் பரிசுகள்:
பின்னர் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், இச்சுற்றுப்போட்டித் தொடர் முழுவதும் நடுவர்களாகப் பணியாற்றிய சுந்தர், ராஜா ஆகியோருக்குதைக்கா உபைதுல்லாஹ்வும்,
போட்டித் தொடர் சிறப்புற நடைபெற ஏற்பாட்டாளர்களுடன் முழு ஒத்துழைப்பளித்த காயல் ராக்கர்ஸ் அணியின் வீரர் அப்துல் ஹமீதுக்கு யு.ஷேக்னாவும்,
இறுதிப் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்ட KTN அணி வீரர் ஃபெரோஸ் கானுக்கு, மாவட்ட க்ரிக்கெட் கழக துணைச் செயலாளர் ரொனால்டோவும்,
சுற்றுப்போட்டியின் சிறந்த மட்டை வீரராகத் தேர்வான காயல் ராக்கர்ஸ் அணியின் ஆதமுக்கு சொளுக்குவும்,
தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட KTN அணி வீரர் ஸஃப்ரீனுக்கு வாவு ஷாஹுல் ஹமீதும்,
தொடரின் சிறந்த ஆல்ரவுண்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயல் ராக்கர்ஸ் வீரர் ஆதமுக்கு ஃபஸ்லுல் ஹக்கும் பரிசுகளை வழங்கினர்.
இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற Fi-Sky Boys வீரர்களுக்கான தனிப்பரிசுகளை எஸ்.எம்.உஸைர், வெற்றிபெற்ற KTN அணிக்கான தனிப்பரிசுகளை பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி ஆகியோர் வழங்கினர்.
அணிகளுக்கு காசோலை:
இச்சுற்றுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற காயல் ராக்கர்ஸ் அணிக்கு எம்.பி.எஸ்.சுலைமான், நான்காமிடம் பெற்ற AllCom அணிக்கு இஸ்ஸத்தீன் ஆகியோர் காசோலைகளை வழங்கினர்.
வெற்றிக்கோப்பை:
இரண்டாமிடம் பெற்ற Fi-Sky Boys அணிக்கான காசோலை மற்றும் பரிசுக்கோப்பையை, சிவகுமரன் வழங்கினார்.
முதலிடம் பெற்ற KTN அணிக்கான காசோலை மற்றும் வெற்றிக் கோப்பையை வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் வழங்கினார்.
நன்றியுரை, துஆ, நாட்டுப்பண்ணுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த க்ரிக்கெட் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கூடுதல் படங்கள்:
A.K.இம்ரான்
வி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |