காயல்பட்டினம் மகுதூம் தெருவில் அமைந்துள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் 15ஆம் ஆண்டு விழா, 18.04.2014 அன்று, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மறுநாள் 19.04.2014 அன்று, “பகிர்வு நாள் விழா” மற்றும் பிரியாவிடை வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வின்போது, பள்ளியின் அனைத்து மாணவ மழலையரும் தத்தம் வீடுகளிலிருந்து வேறுபட்ட பல்வகை தின்பண்டங்களை அனைத்து மாணவர் எண்ணிக்கைக்கேற்ப எடுத்து வந்து, அவரவர் பண்டங்களை மற்ற அனைவருக்கும் பகிர்ந்துகொள்வது வழமை. எனவே, இத்தினத்தை “பகிர்வு தினம் - Sharing Day” என்ற பெயரில் கொண்டாடி விடைபெறுகின்றனர். அந்த அடிப்படையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளியின் மழலை மாணவ-மாணவியர் தம்முடன் எடுத்து வந்திருந்த தின்பண்டங்களை அனைத்து மாணவ-மாணவியருடனும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
அப்பள்ளியில் பயின்று, மேற்படிப்பிற்காக (முதல் வகுப்பில் சேர) வெளிச்செல்லும் மழலையரை வாழ்த்தி, அப்பள்ளியின் இயக்குநரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா அறிவுரை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை இயக்குநர் பாளையம் ஃபாஹிமா இப்றாஹீம் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் இதற்கு முன் நடைபெற்ற பகிர்வு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |