ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 22ஆவது செயற்குழுக் கூட்டத்தில், கல்வி, மருத்துவம், இமாம் - பிலால் ஊக்கத்தொகை ஆகியவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்தும், வரும் ரமழான் மாதத்தில் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 22ஆவது செயற்குழு கூட்டம், இம்மாதம் 09ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில் மன்றத்தின் செயலர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை தலைமையில், துணைத் தலைவர் மக்பூல் அஹ்மத், செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் நகர்நலன் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்த பின், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
கல்விக் கூட்டமைப்பான இக்ராஃவின் நிர்வாகச் செலவினம், கல்வி உதவித்தொகைக்கு நிதியொதுக்கீடு:
சென்ற ஆண்டு போல இவ்வாண்டும் அபூதபீ காயல் நல மன்றதத்தின் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 மாணவர்களுக்கு Iqra Educational Scholarship திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டு, அதற்காக ரூபாய் 30 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யவும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ-மாணவியரின் கல்வி வளர்ச்சி அறிக்கையை (Progress Report) அதற்கான ஆவணங்களுடன் இக்ராஃவிடம் கேட்டுப் பெறவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்து தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபாவின் நிர்வாகச் செலவினத்துக்கு நிதியொதுக்கீடு:
மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபாவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் இணைய முடிவு:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வாவின்) முன்முயற்சியில் செய்யப்படும் - இமாம் பிலால் ரமழான் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் இணைந்து செயல்படவும், அவ்வகைக்காக ரூபாய் 25 ஆயிரம் தொகையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ரமழானில் அடுத்த பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் - புனிதமிக்க ரமழான் மாதத்தில் கூட்டி சிறப்புற நடத்திடவும், நாள் மற்றும் நிகழ்விடங்கள் குறித்து நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட பின், தனி அழைப்புச் செய்தியாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
சாதனை மாணவ-மாணவியருக்கு வாழ்த்துக்கள்:
நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் வரலாறு பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற - சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் - காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் - ஏ.கே.சுலைஹா தம்பதியின் மகன் ஜெ.எஸ்.முஹம்மத் சுஹைலுக்கும்,
நகரளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கும், வெற்றிபெற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும், அவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவியரின் பெற்றோருக்கும் அபூதபீ காயல் நல மன்றம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்வதோடு, அவர்களின் வருங்காலம் ஒளிமயமாகத் திகழவும், அவர்களது முன்னேற்றத்தால் அவர்களின் குடும்பமும், சமுதாயமும், ஊரும் பயன்பெறவும் வாழ்த்தி துஆ செய்கிறது.
அடுத்த செயற்குழுக் கூட்டம்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை, வரும் ஜூன் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின் நடத்தப்படும் என மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
நன்றியுரை, துஆ - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (21ஆவது) செயற்குழுக் கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |