காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் தலைவர் மற்றும் நடப்பு கவுரவ தலைவரும், காயல்பட்டினம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடி பொருளாளரும், நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் (MOC) முன்னாள் துணைத்தலைவரும், ‘மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ்’ எனும் பெயரில் - கோல்கத்தா, சென்னை, தூத்துக்குடி நகரங்களில் தொழிற்சாலை நடத்தி – பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியவருமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் என்ற பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார், இன்று 15.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
நல்லடக்கம்:
பொதுமக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், குத்பா பெரிய பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 17.15 மணிக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. இலங்கை கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ தொழுகையை வழிநடத்த, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆ பிரார்த்தனை செய்தார். பின்னர், குத்பா பெரிய பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரங்கல் கூட்டம்:
17.50 மணியளவில், குத்பா பெரிய பள்ளியின் வெளி வராந்தாவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பிரமுகர்கள் இரங்கல் உரை:
குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் சார்பில், பெரிய பள்ளி கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை சார்பில், நெல்லை அப்துல் மஜீத், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் சார்பில் அதன் முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, காயிதேமில்லத் பேரவைகள் சார்பில் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் - வேலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுரையாற்றினார்.
மறைந்த எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் ஹாஜி அவர்களின் பொதுநலத் தொண்டுகள் மற்றும் சொந்த வாழ்வில் அவர்கள் பேணிய நற்பண்புகள் குறித்து அவர்கள் தமதுரையில் புகழ்ந்துரைத்துப் பேசினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை - அதன் சோதனையான காலகட்டத்திலும் தனித்திருந்து காத்தவர் என்றும், இன்று கட்சியின் காயல்பட்டினம் கிளைக்கு நல்ல அலுவலகம் அமைய அவர்களது பெருமுயற்சி முக்கிய காரணம் என்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பேசினர்.
நிறைவாக, மறைந்த ஹாஜி எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் குடும்பத்தார் சார்பாக, அவரது மகன் ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத் பேசினார்.
குடும்பத்தார் வேண்டுகோள்:
மறைந்த தம் தந்தை தமது வாழ்நாளில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஊறு விளைவித்திருப்பின் அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்பதாகவும், அன்னார் யாருக்கேனும் கொடுக்கல் வாங்கலில் நிலுவை வைத்திருப்பின், தகுந்த ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறும், அவர்களது மண்ணறை - மறுமை நல்வாழ்வுக்காக அனைவரும் துஆ பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். துஆ, ஸலவாத்துடன் இரங்கல் கூட்டம் நிறைவுற்றது.
கலந்துகொண்டோர்:
நல்லடக்க நிகழ்வுகள் அனைத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத்தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கோதர் முகைதீன், மாணவரணி மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி, நெல்லை மாவட்ட செயலாளர்களான மேலப்பாளையம் எல்.கே.எஸ்.மீரான், கடையநல்லூர் செய்யித் முஹம்மத், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.எஸ்.டி.ஷம்சுல் ஆலம், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், தூத்துக்குடி நகர நிர்வாகி கனி மற்றும் கட்சியின் மாவட்ட - நகர நிர்வாகிகள்,
ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஹல்ஜீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.எம்.யாஸர் அரஃபாத், மவ்லவீ காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, முத்துச்சுடர் மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ,முஹம்மத் இஸ்மாஈல், புதுப்பள்ளி தலைவர் எஸ்.எம்.உஸைர், குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் தலைவர் ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அதன் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன்,
நெல்லை முஸ்லிம் அநாதை நிலைய துணைத்தலைவர் பேராசிரியர் ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, கித்மத் சேவா சங்க தலைவர் எம்.எம்.பக்ரீன், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், அதன் துணைத்தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், செயற்குழு உறுப்பினர்களான வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகி முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஜன்சேவா கூட்டுறவு சங்க காயல்பட்டினம் கிளை தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும்,
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து பல்வேறு பொதுமக்களும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். |