ஜூன் 10, 2014 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் பெரிய விவாதம் இன்றி
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று அக்கூட்டத்தின் பொருள் எண் 14 ஆகும். இது நகரின் சில பகுதிகளில் - PAVER BLOCK (சிமெண்ட் கல்)
தொழில்நுட்பத்தில் சாலைகள் அமைப்பது குறித்ததாகும். 22 இடங்களில், 1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் -
இத்தொழில்நுட்பத்தில் சாலைகள் அமைக்க ஒப்புதல் கோரப்பட்டு, மன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டும் உள்ளது.
நகர்மன்றத்தின் ஜூன் மாத ஒப்புதலை தொடர்ந்து, தற்போது 6 சாலைகளுக்கு - 43.65 லட்ச ரூபாய் மதிப்பில் - ஒப்பந்தப்புள்ளிகள் கோரி
விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.
PAVER BLOCK தொழில்நுட்பத்தில் பரவலாக சாலையோர நடைபாதைகள், வளாகங்களுக்கு உள்ளே உள்ள நடைபாதைகள் ஆகியவையே
அமைக்கப்படும்.
தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை விட அதிக தொகை தேவைப்படும் PAVER BLOCK தொழில்நுட்பத்திலான சாலைகள் இந்தியாவில் சில இடங்களில்
அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் நேர்த்தியாக அமைக்கப்படவேண்டிய இது போன்ற சாலைகள், இந்தியாவில் அதிக அளவில் தோல்வியே
அடைந்துள்ளன. அதிக பயன்பாட்டின் போதும், முறையாக அமைக்கப்படாத காரணத்தினாலும், எளிதாக இதன் கற்கள் பெயர்ந்து வந்து
விடும்.
மும்பையில் பழுதடைந்த PAVER BLOCK சாலை
மும்பை மாநகராட்சி - இது போன்ற சாலைகளை இனி அமைப்பதில்லை என சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு -
இத்தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் - எளிதாக பழுதடைந்து, மக்களுக்கு பெருத்த சிரமத்தை கொடுத்ததே காரணம்.
PAVER BLOCK தொழில்நுட்ப சாலைக்கு ஒப்புதல் கொடுத்த ஜூன் மாத கூட்டத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு பொருள் (எண் 25) - பழுதடைந்த
அப்பாபள்ளி தெரு சாலையை 5.2 லட்ச ரூபாய் செலவில் சீரமைப்பதாகும். இந்த சாலை - தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரால் 9 லட்ச ரூபாய்
மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே பழுதடைந்தது.
அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே பாதிக்கப்பட்ட இந்த சாலையை, ஒப்பந்ததாரர் செலவில் சீரமைக்க கூறாமல், நகராட்சியின் செலவில்
சீரமைக்க - நகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் கோரி, இந்த பொருளை இக்கூட்டத்தில் முன் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்றத்
தலைவர் குறிப்பு எழுதினாலும், பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது.
காயல்பட்டினம் நகராட்சியில் சாதாரண சாலையை கூட தரமாக அமைக்க திறனான ஒப்பந்ததாரர் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. இந்த
நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் எவ்வாறு தரமான சாலைகள் அமைக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. சாலைகள் உட்பட நகராட்சியில்
நடக்கும் எந்த கட்டுமானப் பணியையும் பொறியியல் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதே இல்லை. நெய்னார் தெரு சாலை அமைப்பதில்
நடந்த மோசடி இதற்கு மற்றொரு உதாரணம்.
மேலும் இந்த சாலைகளை பயன்படுத்த உள்ள பகுதி மக்கள் / பகுதியை சார்ந்த பொது நல அமைப்புகள் ஆகியோரிடம் இந்த புதிய
தொழில்நுட்பத்தில் திட்டமிடப்பட்டுள்ள சாலையின் தன்மை குறித்து கருத்தும் கேட்கப்படவில்லை; விளக்கங்களும் வழங்கப்படவில்லை.
PAVER BLOCK தொழில்நுட்பத்தில் சாலைகளை அமைக்கும் முடிவு, மக்களின் தேவைகளை அறியாமல், நகராட்சியில் நிறைவாக இருக்கும் அரசு
மானியம் உட்பட மக்கள் வரிப்பணத்தை வெகு விரைவாக வீணடிக்க திட்டமிடப்பட்டுள்ள செயலாகவே தெரிகிறது. |