காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், இம்மாதம் 22ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், தங்களைப் போன்ற நன்மக்களின் மேலான ஒத்துழைப்புகளைக்கொண்டு நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல் பணிகள் நனிசிறப்புடன் நடைபெற்ற வருகின்றன, அல்ஹம்துலில்லாஹ்.
இங்கு, மாத ஊதியத்தின் அடிப்படையில் இமாம் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரது திறமைமிக்க பயிற்றுவிப்பால், இங்குள்ள மீனவ முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 45 சிறுவர் - சிறுமியர் நிறைவான மார்க்க அடிப்படை அறிவைப் பெற்று வருகின்றனர்.
முக்கியம், நம் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் - தங்களைப் போன்ற பிரமுகர்களை அழைத்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அந்நிகழ்ச்சியில் - இப்பள்ளியில் மார்க்கக் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடைகள் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 22.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 05.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இங்கு மத்ரஸாவில் பயிலும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடைகளும், 80 குடும்பத்தினருக்கு பெருநாள் சமையல் பொருட்களும் வழங்கப்படவுள்ளது.
தங்களுக்கிருக்கும் பல்வேறு அலுவல்களையும் அல்லாஹ்வுக்காக சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, இந்நிகழ்ச்சியில் தாங்கள் அவசியம் பங்கேற்று சிறப்பிப்பதன் மூலம், இப்பகுதி இளஞ்சிறாருக்கு நாம் உற்ற துணையாக என்றும் இருக்கிறோம் என்பதை உணர்த்த வருமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
வல்ல அல்லாஹ் தங்களின் தொழில்துறையில் மேலான அபிவிருத்தியை நல்கி, ஈருலக வெற்றிகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
மஃரிப் தொழுகையை அனுசரித்து, குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவக்கப்படவுள்ளதால், தயவுசெய்து சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு வந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பாக...
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |