காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், இன்று (ஜூலை 19 சனிக்கிழமை) 18.30 மணியளவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித் முஹம்மத் துஆ பிரார்த்தனை செய்தார்.
மஃரிப் வேளை வந்ததும், நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், திராட்சைப் பழம், மாதுளம்பழம், கடற்பாசி, குளிர்பானம், கறிகஞ்சி, கட்லெட், வடை வகைகள், பர்கர் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நிறைவில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் சேவைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் சிற்றுரையாற்றினார்.
நகரில் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதாகக் கூறிய அவர், அனைவரும் தமது இரத்த வகுப்புகளை காக்கும் கரங்கள் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும், அறிமுகமான அனைவரிடமும் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் பதிவு செய்யச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
காயல்பட்டினத்தில் இரத்த வங்கி தற்காலத்தில் அவசியம் என்பதைக் கருத்திற்கொண்டு, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையிலேயே அவ்வங்கி அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.மீராஸாஹிப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட பொருளாளரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, ரியாத் காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், இ.எம்.சாமி, குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், நகரப் பிரமுகர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உள்ளிட்டோரும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
ஹிஜ்ரீ 1433 ரமழான் மாதத்தில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |