ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 11ஆம் நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல் நகர மக்களுக்காக பல்வேறு நலப் பணிகளை முன்னோடியாக இருந்து செய்து வரும் துபை காயல் நல மன்றத்தின் ஜூலை மாதத்திற்கான செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத் தலைவர் தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர் நூஹு ஸாஹிப் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் காயல் சொந்தங்களுக்காக மன்றம் செய்து வரும் பல்வேறு நலப் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன. சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் மன்ற உறுப்பினர்களிடமும், அமீரகவாழ் மன்ற ஆதரவாளர்களிடமும் மன்றத்தின் நலப்பணிகளுக்காக ஜகாத் நிதி வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு மன்றத்தின் மூலம் பெறப்படும் ஜகாத் நிதி நமதூர் ஏழை மக்களுக்கு வருடா வருடம் முறையாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் மருத்துவ சிகிச்சைக்காகவும், கல்விக்காகவும் தேவையுடைய வறியவர்கள் உட்பட பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி உதவிகள் வழங்குவது என செயற்குழு தீர்மானித்தது.
இதற்காக மன்றத்தின் மருத்துவ உதவிக் கமிட்டியும், கல்வி உதவிக் கமிட்டியும் துரிதமாக செயல்பட்டு மன்றத்தின் உதவியை நாடி வந்திருக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி சேருவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மன்றத்தின் சார்பாக நமதூர் இமாம்கள், மதரசா ஆசிரியர்களுக்கு கே.எம்.டி. மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டது. இது போன்று நமதூர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட இதர அலுவலக ஊழியர்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன.
செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கீழக்கரையை சார்ந்த ஹாஜி நஜ்முதீன் ஸதக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட - இஃப்தார் நிகழ்ச்சியுடனான செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |