2007 - 2008 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - 14 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்காலிக நோக்கில் நியமனம் செய்யப்பட்ட அவர்களின் பணிக்காலம், சர்ச்சைக்குரிய சூழலில் ஏறத்தாழ 7 ஆண்டுகள் நீண்டு, அவர்களில் 13 பேரின் பணி நீட்டிப்பு - இறுதியாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலை பறிக்கப்பட்ட 11 தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாத்திட தமிழக அரசை வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையம் காயல்பட்டினம் கிளை சார்பில் இன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சு.பன்னீர் செல்வம் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றிய 11 பேரை எவ்வித காரணமுமின்றி, எந்த முன்னறிவிப்புமின்றி - பணிக்கு வர வேண்டாம் என நகராட்சி ஆணையர் கூறி அனுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது, அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டதாகக் கூறினார். 7 ஆண்டுகள் பணியிலிருந்திருக்கிறார்களே என்று நாங்கள் கேட்டதற்கு, அவர்கள் பணிக்கு வந்த வழி சரியில்லை என்று ஆணையர் கூறினார்.
எத்தனை துறைகளில் முறைப்படி பணியமர்த்தப்படுகின்றனர்? எல்லாத் துறைகளிலும் பல லட்சங்களைக் கொடுத்துதான் பணியில் சேருகின்றனர். இது எங்களுக்குத் தெரியாதா?
தற்போது இவர்களை திடீரென பணியிலிருந்து நீக்கி விட்டீர்களே? இவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்ன?
இதே இடத்தில் இந்த ஒப்பந்தப் பணியாளர்களை விமர்சித்தும் நாங்கள் பேசித்தான் இருக்கிறோம். அதை மறுக்கவில்லை. அன்று நகராட்சியில் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் ஊழியர்கள் நிரந்தரமாக இருக்கவில்லை. அதனால் பணியில் பல குறைபாடுகள் இருந்தன என்ற அடிப்படையில் நாங்கள் விமர்சித்தோம்.
நகரில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 18 வார்டுகளிலும் தண்ணீரைத் திறந்து விடவே 13 பேர் தேவைப்படுகிறது. சுகாதாரப் பணியில் 27 பேர் உள்ளனர். ஓட்டுநர்கள் 5 பேர் தேவை. ஆனால் ஒப்பந்தப் பணியாளர்களை அனுப்பி வைத்துவிட்டு, நகராட்சியில் வேறு பணியிலிருப்போரை டிரைவராக பணியில் வைக்கவில்லையா?
ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் விஷயத்தில் தணிக்கைத் தடை என்றெல்லாம் காரணம் கூறுகிறார்கள். நகராட்சியில் ஊழியர்கள் போதுமான அளவில் இல்லாததால், தெரு விளக்குகளைக் கூட கவுன்சிலர்கள் தூக்கிக் கொண்டு செல்லும் நிலையுள்ளது.
இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் குறித்து இணையதளத்தில் பல விபரங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அவர்களின் நியமனம் முறையானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஏழு ஆண்டுகள் நகராட்சியில் பணியிலிருந்திருக்கிறார்களே? திடீரென அவர்களை வீட்டிற்கு அனுப்பினால் அவர்களின் குடும்ப நிலை என்ன என்பதுதான் எங்கள் கேள்வியாக உள்ளது.
தணிக்கைத் தடை பற்றிக் கூறுகின்றனரே? அது எப்படிப்பட்டது என எங்களுக்குத் தெரியாதா? திடீரென இவர்களது வேலையைப் பறித்துவிட்டதால், ஒருவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஒருவேளை அவர் இறந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
இந்தப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட விஷயத்தில் தலைவிக்கு பெரும் பங்கு உண்டு. ஓட்டுப்போட்ட நாங்கள் தலைவியிடம்தான் உரிமையுடன் கேட்க முடியும். ஆணையாளர் இன்றிருப்பார். நாளை சென்று விடுவார். ஆனால் தலைவி 5 வருடங்களுக்கு இருப்பார்.
இந்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி கொடுப்பதற்கு ஆதரவு தெரிவித்து, சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு 16 நகர்மன்ற உறுப்பினர்கள் கூறியும், தலைவி கூட்டத்தைக் கூட்டாமல் தவிர்த்து வருகிறார். உடனடியாக கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சி.ஐ.டீ.யு. அதை எந்த முறையில் சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் சந்திப்போம்.
அதுபோல, வாடகை கார் - வேன் ஓட்டுநர்கள் தம் வாகனத்தை நிறுத்தி வந்த இடத்தை அம்மா உணவகம் கட்டுவதற்காக எடுத்துக்கொண்டனர். இவ்விஷயத்தில் ஆணையாளர் குழப்புகிறாரா, தலைவர் குழப்புகிறாரா என்று தெரியவில்லை. அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு, அவர்களுக்குரிய இடத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு சு.பன்னீர் செல்வம் பேசினார்.
சி.ஐ.டீ.யு. மாவட்ட செயலாளர் வை.பாலசுப்பிரமணியம் துவக்கவுரையாற்றினார். சி.ஐ.டீ.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஆ.சந்திரசேகர், சிவதாணுதாஸ், பொன் கல்யாண சுந்தரம், ச.கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
திடீரென வேலை பறிக்கப்பட்டதால், இந்த 11 ஊழியர்களின் குடும்பங்களும் வருமானமின்றி நிர்க்கதியான நிலையிலுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் வேலை அளிக்காவிட்டால் சி.ஐ.டீ.யு. பல வழிகளில் தொடர்ந்து போராடும் என்றும் அவர்கள் பேசினர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
நிறைவில், ஒப்பந்தப் பணியாளர்களின் வேலையைப் பறித்தமைக்காக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவரைக் கண்டித்தும், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 21:30/17.07.2014] |