ஆறுமுகநேரியில் உப்பளங்கள், விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் டி.சி.டபிள்யு தனியார் தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டுவாரிய அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் சுமார் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வருகிறது. பாரம்பரிய தொழிலான உப்பு உற்பத்தித்தொழில் மாவட்டத்தில் பெருகிவரும் அனல் மின் நிலையங்கள், தனியார் தொழில் நிறுவனங்களின் ரசாயன கழிவுகளால், மாசுபட்டு வருகிறது.
மாவட்டத்தின் தென்பகுதியான ஆறுமுகநேரி பகுதியில் சுமார் 4000ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்கள் அனைத்தும் ஆறுமுகநேரி சாகுபுரத்திலுள்ள டி.சி.டபிள்யு எனப்படும் தாரங்கதாரா கெமிக்கல் தனியார் தொழிற்சாலைக்கு பின்பகுதியில் உள்ளன. இந்த தொழிற்சாலையின் எலிமினேட் பிளாண்டில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் உப்பளங்களுக்கு மத்தியிலுள்ள நிலங்களில் பாத்தி கட்டி சேகரிப்படுகிறது.
மிகவும் கொடிய நஞ்சுத்தன்மை வாய்ந்த இந்த கழிவை நிலம், நீர், பாதிக்காத வகையில் நன்றாக சுத்திகரித்து வெளியேற்றவேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலையின் கெமிக்கல் கழிவுகள் மண்தரையில் விதிமுறைக்கு புறம்பாக சேகரிக்கப்படுகிறது.
நாளடைவில் நிலத்திற்குள் இறங்கிய ரசாயன கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்க உப்பளங்களிலுள்ள கிணற்று நீர் கலர் மாறிவிட்டதுடன், உப்பு வயல்களும், உற்பத்தியாகும் உப்பும் சிகப்பு நிறமாகி வருகிறது. கெமிக்கல் கழிவுகளால் நஞ்சாகும் உப்பினை எதற்கும் பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில் இந்த நிறுவனம் ராட்சத போர்வெல்களை அமைத்து நிலத்தடி நீரை முறைகேடாக உறிஞ்சி எடுத்து வருகிறது.
நிலம், நிலத்தடி நீரில் கலக்கும் டி.சி.டபிள்யு நிறுவனத்தின் ரசாயன கழிவுகளால் உப்பு விளையும் வயல்கள், நெல் விளையும் விவசாய நிலங்கள் மலடாகி வருகின்றன. இந்த ரசாயன கழிவுகள் எல்லாம் வடிகால்கள் மூலமாக அருகில் இருக்கும் கடலில் சென்று கலப்பதால் கடல்வாழ் உயிரினங்களும் அழிகின்றன.
இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் மற்றும் நிலக்கரி சாம்பல் கழிவுகளை விவசாய நிலங்களுக்குரிய வடிகால் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வடிகால் வாய்க்காலில் இந்த நிறுவனம் விதிமுறைக்கு புறம்பாக கழிவுகளை கொட்டி வடிகால் வாய்க்காலை மூடி வருவதை அறிந்தும் அரசுத்துறை அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
இந்த ரசாயன கழிவுகளால் விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் மாசு அடைந்து விட்டதால் இத்தொழிலை நம்பியுள்ள விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத்தொழிலாளர்கள் வருமானத்திற்கு வழியின்றி நிர்கதியாகியுள்ளனர்.
டி.சி.டபிள்யு நிறுவனத்தின் ரசாயன கழிவுகள் காற்றில் கலப்பதால் நச்சுகாற்றை சுவாசிக்கும் ஆறுமுகநேரி, ஆத்தூர், புன்னக்காயல், காயல்பட்டணம், கொம்புதுறை, வீரபாண்டியபட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் இந்த நிறுவனத்தை மூடவேண்டும் என்று பலவருட காலமாக தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்நிறுவன விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது கேலி கூத்தாகும்.
பாரம்பரியமான உப்பளத் தொழில், விவசாயத் தொழில் மற்றும் சுற்றுப்புறசூழலை பாதித்து வரும் தாரங்கதாரா கெமிக்கல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ரசாயன கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும்.
பொதுமக்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதுடன், விவசாயம், உப்பளத் தொழில்களை முடக்கி வரும் இந்த நிறுவனத்தினை நிரத்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாதபட்சத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி மதிமுக சார்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
டி.சி.டபிள்யு. தொழிற்சாலை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |